TamilsGuide

கையில் வழங்கப்பட்ட சான்றிதழ்... நினைத்ததை செய்துமுடித்த பார்த்திபன்..

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் பார்த்திபன். தான் எடுக்கும் திரைப்படங்கள் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் அவர் கூறும் கருத்துக்கள் பலமுறை சிந்திக்கவும், சர்ச்சைகளை ஏற்படுத்தவும் தவறியதில்லை.

இந்த வரிசையில், பார்த்திபன் சமீபத்தில் செய்து முடிக்க நினைத்த காரியத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆந்திர பிரதேசத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பார்த்திபன் சாதி குறித்து பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பார்த்திபன் தான் எந்த சாதி, மதத்தை சாராதவர என்று அதிகாரப்பூர்வ சான்று பெறும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

சாதி, மதம் அடிப்படையிலான பிளவுகள் தேச ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் வகையில், தன்னை "சாதி - மதமற்றவர்" என அறிவித்து சான்றிதழ் வழங்கக் கோரி நடிகர் பார்த்திபன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

முன்னதாக, சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் அவர் அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படாத நிலையில், அவர் நீதிமன்றத்தில் தனது கோரிக்கையை முன்வைத்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, நடிகர் பார்த்திபனின் கோரிக்கையை ஏற்று, அவருக்கு ஒரு வார காலத்திற்குள் "சாதி, மதம் அற்றவர்" என்பதற்கான சான்றிதழை வழங்க வேண்டுமென்று சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 27-ஆம் தேதி சோழிங்கநல்லூர் வட்டாட்சியர், பார்த்திபன் எந்த சாதி, மதத்தை சாராதவர் என சான்றிதழ் வழங்கினார். இதன் மூலம் சட்டபூர்வமாகத் தனது சாதி, மத அடையாளங்களை அவர் துறந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 29) மீண்டும் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், சான்றிதழ் வழங்கப்பட்ட விவரம் நீதிமன்றத்தில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட உள்ளது.
 

Leave a comment

Comment