• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் மதுபானங்கள் மீதான வரி அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்

கனடா

கனடாவில் மதுபானங்கள் (மதுபான ஆலைகள், வையின் மற்றும் டிஸ்டில்லரிகள்) மீதான வருடாந்திர வரி உயர்வைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கவுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மதுபான உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக, கனடாவில் மதுபானங்கள் மீதான 'கலால் வரி' (Excise taxes) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ம் திகதி பணவீக்கத்திற்கு ஏற்ப உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால், அரசாங்கம் கடந்த 2023-ம் ஆண்டு முதல் இந்த வரி உயர்வை தற்காலிகமாக 2 சதவீதமாகக் கட்டுப்படுத்தியது.

இந்த வரி உயர்வின் கட்டுப்பாடு நடப்பு ஆண்டோடு முடிவடைய இருந்த நிலையில், தற்போது இதனை 2028-ம் ஆண்டு வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கனடாவில் உள்ள சிறிய வகை மதுபான உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், முதல் 15,000 ஹெக்டோலிட்டர் பீர் உற்பத்திக்கு விதிக்கப்படும் கலால் வரியில் பாதியைத் தள்ளுபடி செய்யும் ஒப்பந்தமும் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலித் தடங்கல்களுக்கு மத்தியில், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஒரு ஸ்திரத்தன்மையை வழங்குவதே இந்த முடிவின் நோக்கம் என அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, இந்த கோடையில் கனடாவில் நடைபெறவுள்ள பிபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது மதுபானங்களுக்கான தேவை அதிகரிக்கும் எனக் கருதப்படுவதால், இந்த வரிச் சலுகை உற்பத்தியாளர்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும்.

அதேநேரம், மதுபானங்கள் மீதான வரி உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் கனடிய வரி செலுத்துவோர் கூட்டமைப்பு ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply