• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க 20 பாகிஸ்தான் கப்பல்களுக்கு அனுமதி - இறங்கி வந்த ஈரான் 

உலகின் 20 சதவீத எண்ணெய், எரிசக்தி ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை, அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் முடக்கி வைத்துள்ளதால் சர்வதேச அளவில் தட்டுபாடு நிலவுகிறது.

குறிப்பாக ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் தற்போது எரிபொருள் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

முன்னதாக ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்ற பாகிஸ்தான் கப்பலுக்கு ஈரான் அனுமதி மறுத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாகிஸ்தானின் 20 கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் கொடியுடன் கூடிய இரண்டு கப்பல்கள் தினமும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்க ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.

இதனிடையே ஹார்முஸ் ஜலசந்தியைத் தான் முழுமையாக மூடவில்லை என்பதை ஈரான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

நட்பு நாடுகள் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணிக்க ஈரான் முழு ஒத்துழைப்பு வழங்கும். அதேநேரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மற்றும் அவற்றில் ஆதரவு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படாது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி முன்னதாக கூறியிருந்தார்.

இதனிடையே இந்தியாவின் மேலும் 2 எரிவாயு கப்பல்கள் ஈரான் சிறப்பு அனுமதியுடன் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து 90,000 மெட்ரிக் டன் எல்பிஜியுடன் இநதியா வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply