• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பணக்காரனாக வாழ கத்துக்கணும் - கவனம் ஈர்க்கும் கார்மேனி செல்வம் டிரெய்லர்

சினிமா

பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `கார் மேனி செல்வம்.' சமுத்திரக்கனி-கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி இருக்கும் இந்தப் படம் வருகிற ஏப்ரல் 03-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி இந்தப் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டிரெய்லரின் படி நடுத்தர குடும்பத்தினர் சந்திக்கும் வாழ்க்கை போராட்டங்களும், சாமானியன் ஒருவன் பணக்காரனாக முயற்சிப்பதும், அதனால் ஏற்படும் விளைவுகளை பேசும் படமாக கார்மேனி செல்வம் இருக்கும் என்று தெரிகிறது.

முன்னதாக இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில், படக்குழுவுடன் திரையுலகை சேர்ந்தவர்களும், கலைத்துறையை சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்துள்ள நடிகர் சமுத்திரக்கனி பேசும் போது இயக்குநரை வெகுவாக பாராட்டினார்.

அப்போது அவர், "இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியது இறைவனின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய நண்பர் ஸ்ரீராம் மூலமாக இப்படத்தின் திரைக்கதை எனக்கு வந்தது.‌ கதையைப் படிக்கும் போதே அந்த இயக்குநரின் மனநிலை என்ன என்று தெரிந்துவிடும். அந்த மனசு தான் இயக்குநர் ராம் சக்ரியை என்னிடம் அழைத்து வந்தது. அவரை சந்தித்து இதைத்தானே சொல்ல வருகிறீர்கள் வாருங்கள் சேர்ந்து சொல்வோம் என்று இப்படத்தின் பணியை தொடங்கினோம்.

அவர் இப்போது என் வாழ்க்கையில் மிக முக்கியமான நண்பராக இருக்கிறார். இவரைப் போன்ற மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது. இவரை எல்லாம் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நிறைய உண்மைகளுடனும் நிறைய எளிமைகளுடனும் நம்மால் இந்த சமூகத்திற்கு ஏதேனும் ஒரு பங்களிப்பு இருந்திட வேண்டும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு. இப்படி இருப்பவர்களால் தான் உலகம் இயங்குகிறது என்று நான் நினைக்கிறேன்," என்றார்.
 

Leave a Reply