கிளிநொச்சியில் பாரியளவு எரிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
இலங்கை
கிளிநொச்சி – இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில், நபரொருவர் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருந்த 1,220 லீற்றர் பெற்றோல் மற்றும் 530 லீற்றர் டீசல் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, இராமநாதபுரம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த எரிபொருள் தொகை பறிமுதல் செய்யப்பட்டன.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன்
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மற்றொரு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, 247 லீற்றர் டீசலும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் மீட்கப்பட்ட எரிபொருட்களை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






















