• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மற்றொரு முக்கிய வணிக பாதையை மூடும் ஹவுதிக்கள்?

அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. அந்த வழியாக செல்ல முயலும் எந்த ஒரு கப்பலும் அழிக்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்தது.

உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி பாதையாக வளைகுடா நாடுகளை இந்த பாதையே உலகத்துடன் இணைத்து வந்தது.

எனவே எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி மூடலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

செங்கடலில் அமைந்துள்ள மற்றொரு வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஜலசந்தியான பாப் எல் மாண்டேப் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஹவுதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், பெரும்பாலான வணிகக் கப்பல்கள் மாற்றுப் பாதையான பாப் எல்-மாண்டேப் வழியாகப் பயணிக்கின்றன. இதனால் இந்த வழித்தடத்தில் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த அதிகரித்த கப்பல் போக்குவரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக ஹவுதி தலைவர் அப்துல் மாலிக் அல் ஹவுதி தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய கடல் வழித்தடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. 
 

Leave a Reply