TamilsGuide

ஒரு தலை ராகம். அபாரமான வெற்றி. எங்கும் இதே ராகம் தான்.

எளிமையான, அடக்கமான, கல்லூரி போகும் பருவத்தில் இருந்த எந்த பெண்ணை பார்த்தாலும் சுபத்ராவுக்கு கொடுத்த அதே மரியாதையை தமிழ்நாடு கொடுத்துக்கொண்டு இருந்த நாட்கள் அவை..
எனக்கே அது ஒரு அதிசயம், ஆச்சர்யம் தான். படம் பார்த்த எந்த ஆணும் சுபத்ராவை நோக்கி விரல் நீட்டவில்லை.
பெரும்பாலான பெண்களும் குறை சொல்லவில்லை.
விதிவிலக்காக சில பெண்கள்.. அவனுக்கென்னடி, ராஜா! கசக்குதா? மாட்டேன் மாட்டேன் என்று மூஞ்சியை திருப்பிகினு போறியே என்று கடிந்தார்கள்.
அவ்வளவு தான்..
1980-82 ஆம் கல்வியாண்டு முடியும் தருவாய்..
நண்பர்கள் செல்வா, சிவா, சீனு மற்றும் நான்.
அவர்கள் மூவரும் தியாகராயா கல்லூரியில் BA Economics. முதல் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தார்கள்.
பல்லவன் வழி தடம் 38 இல் செம்பியம் Don bosco பள்ளி நிறுத்தத்தில் ஏறி மகாராணி நிறுத்தத்தில் இறங்குவார்கள்.
வாரத்தில் சில நாட்கள் எண்ணெய்க்கு வெயிலில் காயும் எள்ளோடு தானும் காயும் எலி புழுக்கையாக போவேன்.
எண் 38 பேருந்து திருவிக நகரில் இருந்து கிளம்பி வள்ளலார் நகர் போகும் பேருந்து.
நாங்களும் திருவிக நகரில் டெர்மினஸில் இருந்தே ஏறலாம்.
ஆனால் நாங்கள் டான் பாஸ்கோ பள்ளி நிறுத்தத்திற்கு ஐந்தே நிமிடத்தில் வந்து ஒன்றாக ஏறுவோம்.
38 ஆம் எண் பேருந்து TVK நகரில் இருந்து கிளம்பி இந்த டான் பாஸ்கோ பள்ளி நிறுத்தத்திற்கு வர 40 நிமிடங்களுக்கு மேலாகும். 4-5 கி மீ ஊரை சுற்றிக்கொண்டு வரும்.
நண்பர்கள் மூவரும் foot board பயணிகள்.
நான் நடத்துனருக்கு அருகில் உள்ள லேடிஸ் சீட் பிடியை பற்றிக்கொண்டு நிற்பேன்.
Foot board என்றாலே நான் சிகண்டியை பார்த்த பீஷ்மர் போல நாணுவேன்.
ஒரே குறிப்பிட்ட நேரத்தில் பயணிப்பதால் நடத்துனர்களோடு நல்ல தோழமை பாராட்டி பயணித்தோம் நாங்கள்.
நான் நடத்துனர் இருக்கைக்கு அருகில் உள்ள மகளிர் இருக்கையின் கம்பி பிடியை இறுக பற்றிக்கொண்டு படியில் தொங்கிக்கொண்டு வரும் பயல்களோடு பேசிக்கொண்டே இருப்பேன்.
அரசு பதில்கள், மதன் ஜோக்ஸ், அரசியல், சினிமா, குமுதம் விகடன் விமர்ச்சனங்கள், பேருந்தில் உடன் பயணிப்பவர்கள் எதையும் கிண்டல் செய்வோம்.
ஹாங்! Yes. ஒளியும் ஒலியும், TV நாடகங்கள், பட்டி மண்டபங்கள், எதிரொலி கூட எங்கள் பேச்சில் சிக்கி சீரழியும்.
நம்புங்கள்! நாக்கில் நரம்பில்லாமல் நக்கல் அடிப்பேன் எதையும், எவரையும்.
எல்லோரும் சிரிப்பார்கள்.
என்னடா சுபத்திரா, சுலோச்சனா என்று சொல்லிவிட்டு சுயபுராணம் படிக்கிறாய் என்பவர்களே! பொறுங்கள் கொஞ்சம் இதோ அறிமுகம் செய்கிறேன் இந்த கதையின் நாயகியை.
நான் கம்பியை பிடித்துக்கொண்டு நிற்பேனே, அந்த சீட்டில் ஜன்னலோரத்தில் எப்போதும் ஒரு சுபத்திரா அமர்ந்திருப்பாள்.
அதே இருக்கையில் தான் அவள் இருப்பாள். தானுண்டு தன் கையில் ஒரு ஆங்கில நாவலுண்டு என்றிருப்பாள் இந்த சுபத்திரா.
மூனோ நாலோ புடவைகள் தான்கழுத்தில் மாற்றி மாற்றி அணியும் இரண்டு மூன்று மணி மாலைகள்.
கரங்களில் கண்ணாடி வளையல்கள்..
நெற்றியில் ஒரு திருநீற்று கீற்று இல்லையேல் ஒரு சந்தன கீற்று.
மலிவான, அழகான காலணி.
அவ்வளவு தான்.
மின்ட் நிறுத்தத்தில் இறங்கி விடுவாள்.
படத்திலாவது சுபத்திராவுக்கு ஒரு தோழி உண்டு.
இந்த 38 ஆம் எண் பேருந்து சுபத்திராவிற்கு ஒரே ஒரு தோழி கூட கிடையாது.
அந்த ஆங்கில நாவல் மட்டுமே தஞ்சம்..
சரியாக மின்ட் நிறுத்தம் வரும் போது சடாரென எழுந்திருப்பாள்.
நான் நன்றாக விலகி நிற்பேன்.
இறங்கி போய்க்கொண்டே இருப்பாள்.
அடுத்த கல்வி ஆண்டு ஆரம்பித்து சில நாட்களில் ஒரு மாற்றம்..
மெல்ல மெல்ல தான் ஏற்பட்டது. நானே உடனே கண்டு பிடிக்க வில்லை.
அதாவது ஆங்கில நாவலுக்கு கண்கள் என்றில்லாமல் எங்கள் அரட்டைக்கும் கொஞ்சம் செவிகளை திருப்ப ஆரம்பித்து இருந்தாள்.
என்னுடைய கமெண்ட்களுக்கு நடத்துனர், சக பயணிகள், படியில் தொங்கும் நண்பர்கள் எல்லோரும் வாய்விட்டு சிரிக்கும் தருணங்களில் ஒன்றிரெண்டு முறை அவள் இதழ்களில் மெலிதான புன்னகை தோன்ற ஆரம்பித்தது.
அய்யோ! எவ்வளவு அழகான முறுவல்!
இன்னும் சில நாட்களில் நடத்துனரும் கண்டு பிடித்து விட்டார்.
பிற்பாடு நண்பர்களும் கண்டு கொண்டனர்.
சுபத்திரா இள நகை சிந்தும் இள நங்கை என்று நாங்கள் அறிந்து கொண்டோம்.
இருந்தும் காட்டிக்கொள்ள வில்லை நாங்கள்.
இப்போதெல்லாம் நீங்கள் ஏறும் நிறுத்தத்திற்கு இரு நிறுத்தங்கள் முன்பாகவே புத்தகத்தை மூடி வைத்து விடுகிறது அந்த பெண்.
நிறுத்தத்தில் நீ இல்லாமல் நண்பர்கள் மட்டும் ஏறினால் வதனம் வாடி விடுகிறது என்று நடத்துனர் சொல்ல ஆரம்பித்தார்.
மின்ட் நிறுத்தத்தில் இறங்கிய பின்னால் தான்.
ஒருநாள்..

எங்கள் அரட்டை உச்சத்தில் இருந்தது.
சுபத்ரா தலை நிமிர வேணுமே!
நாவல் முடியும் தருவாயில் இருந்தது போல.
விறுவிறுப்பு கூடியிருக்க வேண்டும். எங்கள் பேச்சை விட்டு விட்டு ஆழ்ந்து போயிருந்தாள் புத்தகத்தில்.
ஒரு விதமான ஏமாற்றம் எனக்கு. எரிச்சல் கூட.
என்னையா புறக்கணிக்கிறாய்? என்ற எரிச்சல்..
மின்ட் நிறுத்தத்தில் அவள் இறங்க போகும் அந்த நொடியில் என்னை அறியாமலே அந்த புத்தகத்தை அவள் கையில் இருந்து பறித்து விட்டேன்.
நாளை தரேன். அப்படி என்ன இந்த புத்தகம் ஸ்வரஸ்யாமா இருக்குனு பாத்துட்டு தரேன் என்றேன்.
கிளைமாக்ஸ் நெருங்கிடுச்சு, நாளைக்கு தருகிறேன் என்று அவள் சொன்னதை புறக்கணித்து விட்டு புத்தககத்தை பாண்ட் பையில் திணித்து கொண்டேன்.
நடத்துனர், நண்பர்கள் மூவர் என்று எல்லோரும் என்னை பிடித்து உலுக்கி விட்டார்கள்.
என்ன வேலைடா செஞ்சே! புத்தியில்லையா! என்றெல்லாம் திட்டி தீர்த்தார்கள்.
நாளைக்கு திரும்ப கொடுத்து மன்னிப்பு கேட்டு விடுகிறேன் என்று சமாதானம் சொன்னேன். அன்று பூரா எங்கெங்கோ சுற்றினோம்.
பத்து முறை புரட்டி யிருப்பேன் முதல் பக்கத்தை.
முதல் சில வரிகளை கூட படிக்க முடியவில்லை.
ஒன்றும் புரியவில்லை.. தெரிந்த வார்த்தைகள் ஒன்றி ரெண்டு கூட இல்லை.
மாலை வீடு திரும்பி வீட்டருகே உள்ள நண்பர்களோடு சுற்றி விட்டு வீடு வந்து நாலு பாட்டு நச்சுன்னு விவித பாரதியில் கேட்டு விட்டு பத்து மணிக்கு புரட்ட ஆரம்பித்தேன் அவள் புத்தகத்தை.
தினமுமே என் தந்தை என்ன படிக்கிறேன் என்று கேட்பார்.
அன்றும் கேட்டார்.
புத்தகத்தின் பெயரை பார்த்தேன்.
You never know with women.
James hadly chase எழுதியது.
சொன்னேன்.
ஒரு ஆங்கில அகராதியை கொடுத்து இந்தா பக்கத்தில வச்சுக்கோ.
அர்த்தம் புரியலைனா பாரு என்று சொல்லிவிட்டு அவர் படிக்க ஆரம்பித்து விட்டார்.
உண்மையில் You never know with women என்றால் பொருள் என்ன? என்று கூட எனக்கு சொல்ல தெரியாது.
பிற்பாடு ஒரு சினிமா பாடலை கேட்ட போது தான் இதற்கு பொருள் புரிந்தது.
ஆறு அது ஆழமில்லே
அது சேரும் கடலும் ஆழமில்லே.
ஆழம் எது அய்யா.
அந்த பொம்பள மனசு தான்யா என்று நாலு வரியில் சொன்னதை You never know with women என்று ஒரே வரியில் ஆங்கிலத்தில் chase சொல்லியிருக்கிறார் என்று சில ஆண்டுகள் சென்ற பின் தான் புரிந்தது.
அன்று என் தந்தை இரவு ஒரு மணிக்கு புத்தகத்தை மூடி விளக்கு அணைத்த ம் போது தான் நானும் மூடினேன்.
20-25 பக்கங்கள் தான் படித்திருப்பேன்.
ஆனால் ய் was hooked.
மறுநாள் அதிகாலையிலே தொடர்ந்தேன்.
அன்று இரவு தான் முடித்தேன்.
அடுத்த நாளும் அதையே படித்து அன்று இரவுக்குள் முடித்து விட்டேன்.
எங்கும் இரு நாட்களாக போகவில்லை.
மூன்றாவது நாள் தான் 38 ஆம் நம்பர் பேருந்தில் ஏறினேன். சுபத்திராவிடம் புத்தகத்தை கொடுத்து விட்டு நன்றி சொன்னேன்.
மன்னிப்பு ஒன்றும் கேட்க வில்லை.
கதையில் வந்த அந்த woman Vedha Rux பற்றி ஏதோ கொஞ்சம் சொன்னேன்.
விழி உயர்த்தி பார்த்தாள்.
ஆச்சர்யம் தான் அந்த விழிகளில் தெரிந்தது.
அப்புறம் நான் கேட்காமலே அவள் கொடுக்க, நான் படித்தவை
The Wary transgressor
I would rather stay poor
Want to stay alive முதலிய புத்தகங்கள்.
நாங்கள் அவள் பெயரை கூட கேட்கவில்லை.
B. Com மூன்றாம் ஆண்டு மாணவி என்று அவளே தெரிவித்தாள்.
எங்களுக்கு சீனியர்.
எங்கள் நால்வரின் பெயர்களும் அவளுக்கு தெரியும்.
அவளோடு இறங்கி போய் பேச சொல்லி நண்பர்கள் வற்புறுத்தி கொண்டே இருந்தார்கள்.
நடத்துனர்கள் சிலரும் போய் பேசுப்பா என்று தூண்டினார்கள்.
நான் மறுத்து விட்டேன்.
ஒற்றை காசு வருமானம் எனக்கில்லை.
என்ன செய்ய போகிறேன் என்றே எனக்கே தெரியாது.
காதலாவது...
ஒன்றாவது.
அந்த ஆண்டு என் வாழ்விலேயே றெக்கை கட்டிக்கொண்டு பறந்த ஆண்டு..
இதோ அதோ என்று வந்தே விட்டது அந்த நாள்.
நாங்கள் பேருந்தில் ஏறும் போதே கவனித்தோம்.
அவள் முகம் சிவந்து கிடந்தது. நிறைய அழுதிருகிறாள் என்று உடனேயே தெரிந்தது.
நடத்துனர் உதடுகளை பிதுக்கி கைகளை விரித்தார். அவருக்கும் தகவல் தெரியவில்லை.
அரட்டை ஒன்றும் இல்லை.
சக பயணிகளில் வழக்கமாய் வருபவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
அந்த நிறுத்தம் வந்தது.
இன்று தான் கடைசி நாள்..
நாளை முதல் இந்த நேரத்தில் இந்த பேருந்தில் வர மாட்டேன் என்றாள்.
கண்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது.
நானும் கூடவே இறங்கி விட்டேன்.
அவள் கைகளை பற்றிக்கொண்டேன். அவள் உதற வில்லை.
அவள் முகம் எனக்கு தெரியவில்லை.
நண்பர்கள் விலகி நின்றார்கள்.
நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
டிரைவர் என்னய்யா ஆச்சு? எடுக்கட்டுமா என்றார். கொஞ்சம் பொறு என்று கத்தினார் நடத்துனர்.
அவள் கைகளை விலக்கி கொண்டாள்.
நண்பர்களில் யாரோ என் கண்ணாடியை கழற்றி விட்டார்கள்.
இன்னொருவன் கை குட்டையால் என் கண்களை துடைத்து விட்டான்.
நிறைய அழுதிருக்கிறேன், அழுகிறேன் என்ற உணர்வே இல்லாமல்.
திரும்ப பேருந்தில் ஏறிக்கொண்டோம்..
என்னப்பா இப்படி பண்ணிட்டே! கையை பிடிச்ச. கூடவே போயிருக்க கூடாதா? என்றார் நடத்துனர். அட! அவர் கூட அழுதிருக்கிறார்..
அதற்கப்புறம் பத்து ஆண்டுகள் ஆயிற்று. நான் திருமணம் செய்து கொள்ள.
அப்போதே கூட வாய்க்கும் வயிற்றுக்கும் தான் சம்பாத்தியம்..
31 வயது ஆகி விட்டதே என்று செய்துக்கொண்ட திருமணம்.
இதில் நான் எங்கே 20 வயதில் காதலித்து கல்யாணம் செய்ய?
நண்பர்கள் எப்போதாவது சொல்வார்கள்.
துணிந்து காதலித்திருக்கலாம்டா நீ என்று..
இது ஒரு தலை ராகமா?
இல்லை வறுமையின் நிறம் சிவப்பா? எந்த வகையில் சாரும்?

 

Vino Mohan
 

Leave a comment

Comment