டொராண்டோவில் பனிப்பாதையில் வாகனம் நிறுத்தியவர்களுக்கு 2 மில்லியன் டொலர் அபராதம்
கனடா
ஜனவரி மாதத்தில் பதிவான சாதனை அளவிலான பனிப்பொழிவுக்கு பின்னர், டொராண்டோ நகரில் “பனிப்பாதை” எனக் குறிக்கப்பட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்திய ஓட்டுநர்களுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் நகரம் பாரிய பனிப்பொழிவு தொடர்பில் அறிவித்ததையடுத்து, பனியை அகற்றுவதற்காக பனிப்பாதைகளில் வாகன நிறுத்தம் முழுமையாகத் தடைசெய்யப்பட்டது.
இதனை மீறியதாக 21,508 அபராதச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனவரி 25ஆம் திகதி, டொராண்டோவின் சில பகுதிகளில் சுமார் 60 சென்டிமீட்டர் அளவிற்கு பனிப்பொழிவு பதிவானதைத் தொடர்ந்து இந்த அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புகள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு நிறைவுக்கு வந்தன.
இந்த காலப்பகுதியில் பனிப்பாதைகளிலும், பனியை அகற்றும் நடவடிக்கைக்கு முன் தற்காலிகமாக நிறுவப்பட்ட ஆரஞ்சு நிற “No Parking – Snow Removal” பலகைகள் உள்ள இடங்களிலும் வாகனங்களை நிறுத்தியவர்கள் அதிகபட்சமாக 500 டொலர் வரை அபராதமும், வாகன இழுத்துச் செல்லும் (towing) நடவடிக்கையும் எதிர்கொண்டனர்.
மேலும், பனியை அகற்றும் பணிகளைத் தடை செய்த குற்றச்சாட்டில் 152 கூடுதல் அபராதச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஜனவரி 15 முதல் 30ஆம் திகதி வரை மட்டுமே வழங்கப்பட்ட அபராதங்களின் மொத்த தொகை 2,193,600 டொலராகும்.
எனினும், இந்த கணக்கில் குறிப்பிட்ட நாட்களுக்கு வெளியான அபராதங்கள் சேர்க்கப்படாததால், உண்மையான தொகை இதைவிட அதிகமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.






















