ஏ.ஐ. வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத ஊழியர்கள் வெளியேறலாம்- கூகுள் அதிரடி
சினிமா
உலகின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. உலகின் முன்னணி ஆன்லைன் தேடு பொறி என்ஜின் மட்டுமின்றி யூடியூப், பிளேஸ்டோர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தவிர்த்து ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை உற்பத்தி செய்து கிட்டத்தட்ட ஏகபோக உரிமையை அனுபவித்து வருகிறது.
உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களான அமேசான், மெட்டா ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. ஆனால் இதற்கு கொஞ்சம் வித்தியாசமாக கூகுள் யோசித்து தங்களுடைய ஊழியர்களை நீக்கம் செய்கிறது. அந்த திட்டத்தின் பெயர்தான் 'விருப்ப ஓய்வு' (பை அவுட்). சட்ட பாதுகாப்பு, நிறுவனத்தின் பெயரை பாதுகாக்கவும் மற்றும் ஊழியர்கள் மாற்று வேலை தேடுவதற்கு நேரம் அமைக்கும் வகையில் அவர்களுக்கு குறிப்பிட்ட மாத சம்பளம் மற்றும் பிற பண பலன்களை அளித்து வெளியேற்றுவதே விருப்ப ஓய்வுத்திட்டம் ஆகும்.
கூகுளில் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நேரடியாக பணிபுரிகிறார்கள். இதில் என்ஜினீயர்கள், தரவு ஆய்வாளர்கள், விளம்பர பிரிவு, வர்த்தக பரிவு உள்ளிட்டோர் அடங்குவர். செயற்கை நுண்ணறிவின் தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் கூகுளில் விருப்ப ஓய்வு பெற்று 25 ஆயிரம் பேர் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருப்ப ஓய்வு பெற்று குறிப்பிட்ட ஊழியர்கள் வெளியேறவில்லை என்றால் பணிக்கு லாயக்கில்லை என அந்த நிறுவனமே பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக மறைமுகமாக அறிவித்திருந்தது. தற்போது கூகுள் நிறுவனம் மீண்டும் விருப்ப ஓய்வு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் 5 சதவீத ஊழியர்களுக்கு கூகுள் தலைமை வணிக அதிகாரி பிலிப் ஷிண்ட்லர் எழுதியுள்ள மின்னஞ்சல் கடிதத்தில் இந்த நடவடிக்கை குறித்து அவர் அறிவித்துள்ளார்.
அதில் அவர் "2025-ம் ஆண்டில் நீங்கள் சாதித்த அனைத்தினாலும் நாம் இந்த ஆண்டை வலுவான நிலைப்பாட்டில் தொடங்குகிறோம். ஆனால் போட்டி நிலைமை வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது; முன்னேற்றத்தின் வேகம் மின்சார வேகத்தைப் போன்றது. பெரிய தாக்கத்தை ஏற்படுத்த செயற்கை நுண்ணறிவை தாராளமாக ஏற்க வேண்டும்" என்று வலியுறுத்திய அவர் "நிறுவனம் செயல்பட வேண்டிய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள், அல்லது நிறுவனத்தின் முடிவுகளுக்கு கட்டுப்படாதவர்கள் வெளியேறலாம்" என்று அறிவித்துள்ளார். தீர்வு அணிகள், விற்பனை, நிறுவன வளர்ச்சி உள்ளிட்டவற்றில் பணிபுரியும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதனால் பாதிப்படைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






















