• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் அதிகாலையில் அதிரடி – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

இலங்கை

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பதின்ம வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று (10) அதிகாலை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டிய போதிலும், அந்த வேன் பொலிஸாரின் கட்டளையை மீறி மண்டைதீவு திசை நோக்கிச் சென்றுள்ளது.

அந்த நேரத்தில் மண்டைதீவு வீதித் தடையைப் பரிசோதித்துவிட்டு அல்லைப்பிட்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த ஜீப் வண்டி அந்த வேனை நிறுத்த முயற்சித்த போதிலும், அது தொடர்ந்தும் நிறுத்தாமல் தப்பிச் சென்றதால், பொலிஸார் வேனை நிறுத்துவதற்காக வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அப்போதும் நிறுத்தாமல் தப்பிச் சென்ற வேனை நிறுத்துவதற்காகப் பொலிஸார் வேன் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அதன் சாரதி காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வேனின் பின் இருக்கைகள் கழற்றி அகற்றப்பட்டிருந்த நிலையில், வேனில் இருந்த மேலும் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தற்போது யாழ். மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தப்பிச் சென்ற வாகனத்தை நிறுத்த டயரில் சுடாமல், உயிரைப் பறிக்கும் வகையில் சுட்டது ஏன்?” என்ற கேள்விகளையும் “சட்டம் ஒழுங்கை மீறி தப்பிச் சென்றது தவறு” என்ற விவாதங்களும் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளன.
 

Leave a Reply