கனடாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 10 பேர் காயம்
கனடா
கனடாவில் இடம்பெற்ற பேருந்து விபத்துச் சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.
ஒன்டாரியோ மாகாணம் பிராம்டன் நகரின் மையப் பகுதியில் இடம்பெற்ற பல வாகனங்கள் மோதிய விபத்தில், அரசுப் போக்குவரத்து பேருந்தும் தொடர்புபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 10 பேர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவசர மருத்துவ சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குயின் ஸ்ட்ரீட் ஈஸ்ட் மற்றும் ஹான்சன் ரோடு நார்த் சந்திப்பில், கென்னடி ரோடு சவுத் பகுதியை ஒட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பான தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து பீல் பிராந்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிராம்டன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் அணியினரும் சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






















