TamilsGuide

ஈரானில் பதற்றம் நீடிப்பு - பலி எண்ணிக்கை 2,500-ஐ தாண்டியது

ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.

நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் போராட்டக்காரர் கள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியாக செல்கிறார்கள். அப்போது அரசு மற்றும் அயதுல்லா அலிகமேனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.

போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் போராட்டம்-வன்முறையில் 646 பேர் பலியானதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஈரானில் தற்போது நடந்து வரும் போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2500-யை தாண்டியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் நிறுவனம் கூறும்போது, ஈரானில் போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2,571 ஆக உயர்ந்து உள்ளது.

உயிரிழந்தவர்களில் 2,403 பேர் போராட்டக்காரர்கள் என்றும், 147 பேர் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. 12 குழந்தைகள், போராட்டங்களில் பங்கேற்காத 9 பொதுமக்களும் கொல்லப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. போராட்டங்களில் ஈடுபட்ட 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் ஈரானில் போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நாடு முழுவதும் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஈரானில் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது.

இதற்கிடையே போராடும் மக்கள் மீது அரசாங்க படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்துவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறும்போது, அரசாங்கப் படைகள் தானியங்கி ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கியுள்ளன. எந்த ஆயுதங்களும் இல்லாமல் போராடும் மக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடுகிறார்கள். கட்டிடங்களின் மேற்கூரையில் இருந்து துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள் என்றனர்.

போராட்டங்கள் காரணமாக ஈரானில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. தற்போது சில தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளை ஈரான் அரசு தளர்த்தி உள்ளது. இதற்கிடையே ஈரானில் இலவசமாக இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் அறிவித்துள்ளது.
 

Leave a comment

Comment