மாண்புமிகு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்கள்
மறைந்த பெருந்தயாரிப்பாளர்
ஏவி.எம்.சரவணன் அவர்களின்
திருவுருவப் படத்தைத்
திறந்து வைத்தார்
ரஜினி, கமல், இந்து என்.ராம்
நல்லி குப்புசாமி
ஆகிய பெருமக்களோடும்
ஏவி.எம்.குடும்பத்தாரோடும்
நானும் புகழ்வணக்கம் செலுத்தினேன்
“கலையுலகில்
கடந்த 46 ஆண்டுகளாய்
நான் கடந்துவந்த மனிதர்களுள்
மறக்க முடியாத
ஒரு பேராளுமை எம்.சரவணன்
முதலில் அவர்
என் அறியாமையை மன்னித்தார்
ஏவி.எம் தயாரிப்பின்
சிவப்பு மல்லிக்குப் பாட்டெழுத
முதன் முதலாய்
அவர்களின் கலைக்கூடத்தில்
நுழைந்த பொழுது
ஜமக்காளம் விரித்துத் தரையில்
உட்கார்ந்திருந்தார்கள்
சங்கர் – கணேஷ்
நாற்காலியில் இருந்த
மூவரைப் பார்த்து
‘உங்களில் யார் குமரன்?
யார் சரவணன்?
யார் பாலசுப்ரமணியன்?’
என்று கேட்டேன்
இந்த என் அறியாமையைப்
பொறுத்துக்கொண்டு
புன்னகையால் என்னை
அரவணைத்தவர் எம்.சரவணன்
என் பாடல் ஒலிப்பதிவொன்றில்
பி.சுசீலா பாடிக்கொண்டிருக்கிறார்
பாடலைக் கண்மூடிக்
கேட்டுக்கொண்டிருந்தவர்
‘நிறுத்துங்கள் நிறுத்துங்கள்‘ என்றார்
‘இந்த இரவு
விடிந்துவிட வேண்டும்–இல்லை
பருவம் கரைந்துவிட வேண்டும்’
என்ன அழகான வரி;
இது இசையில்
மூழ்கிவிடக் கூடாது;
இசைக்கருவிகளை நிறுத்தி
சுசீலாவின் குரலில் மட்டும்
வரியைப் பதிவுசெய்யக்
கேட்டுக்கொண்டார்
இவர் தயாரிப்பாளர் மட்டுமல்லர்;
தமிழன்பர் என்று
அவர்மீது அன்புகொண்டேன்
என் வாழ்வின்
துயரப் பொழுதொன்றில்
துணையிருந்தார்
நிலையற்ற உடல் மரித்துவிடும்;
நினைவுகளும் விழுமியங்களும்
மரிப்பதில்லை”
என்று புகழ்வணக்கம் செலுத்தினேன்
வைரமுத்து
@Vairamuthu


