அப்போலோ பரபரப்பானது... காரணம் , பிரதமர் வந்து கொண்டிருந்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல் அமைச்சரைப் பார்ப்பதற்காக..
இது நடந்தது இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர். காலத்தில்.. அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் , திடீரென அப்போலோ மருத்துவமனையில் , தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் அக்டோபர் 1984ல்..
உடனே விரைந்து வந்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி . அது வரை யாருக்கும் எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதியில்லை.. ஆனால் இந்திரா காந்தி , அப்போல்லோ மருத்துவமனைக்கு சென்று கண்ணாடிக் கதவு வழியாக , எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்.. அதிர்ந்து போனார் இந்திரா.. அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் : " IS THAT MGR ? OH MY GOD, I CANT BELIEVE IT "
அருகில் இருந்த ஜானகி அம்மையாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு இந்திரா காந்தி சொன்னாராம் “கவலைப்படாதீர்கள் இவரை காப்பாற்றுவது இந்த நாட்டின் கடமை.. என்னுடைய கடமை..” என்று சொன்னதோடு நிறுத்திக்கொள்ளாமல் , செயலில் இறங்கினார் இந்திராகாந்தி. அடுத்த நாளே பிரதமரின் சிறப்பு விமானத்தில் அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் , அப்போலோவுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.
அது மட்டுமா? இந்திரா காந்தியின் ஏற்பாட்டின் பேரில் , ஏர் இந்தியா போயிங் விமானம் ஒன்று , சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 24 மணி நேரமும் தயாராக , எம்.ஜி.ஆருக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . அவசரமாக மருத்துவர்களை அழைத்து வருவதற்கும் , தேவைப்பட்டால் எம்.ஜி.ஆரை வெளி நாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கும் தயாராக இருக்கச் சொல்லி இருந்தார் இந்திராகாந்தி .
எம்.ஜி.ஆரின் நிலைமை இன்னும் சீரியஸ் ஆக 5.11.1984 அன்று , ஏற்கனவே இந்திராகாந்தி ஏற்பாடு செய்திருந்த தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எம்.ஜி.ஆர்..
ஆனால்...
இதை எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்த இந்திராகாந்தி அப்போது உயிரோடு இல்லை.
ஆம்.. அக்டோபர் 31 காலை வேளையில்தான் , கண் இமைக்கும் வேளையில் , அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து விட்டது... இந்திரா காந்தி தன் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார். உலகமே அந்தச் செய்தியை உடனே அறிந்து கொண்டு விட்டாலும் , எம்.ஜி.ஆரிடம் மட்டும் , அதை சொல்லாமல் மறைக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தவித்தார்கள் மருத்துவர்கள்..
ஏனென்றால் இந்திராகாந்தி இறந்த அந்த வேளையில்தான் , எம்.ஜி.ஆர். உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு , உயிருக்குப் போராடிக் கொண்டு தீவிர சிகிச்சையில் இருந்தார். அந்த வேளையில் இந்த செய்தியை சொல்லி அதைத் தாங்க முடியாமல் எம்.ஜி.ஆர். உயிருக்கு ஆபத்து ஏதாவது ஏற்பட்டு விட்டால்...?
சில நாட்களுக்குப் பின் , அமெரிக்காவில் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டு, எம்.ஜி.ஆர். உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.
அதன் பிறகுதான் , மெல்ல மெல்ல , இந்திரா காந்தியின் மரணச்செய்தியை தயக்கத்துடன் எம்.ஜி.ஆரிடம் சொன்னார்கள் அதிகாரிகள். அதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர்.
உடனடியாக இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலக் காட்சிகளின் வீடியோக்களை கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார் . வீடியோ ஓட ஓட , எம்.ஜி.ஆரின் விழிகளில் கண்ணீர் பெரு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது... எதற்கும் கலங்காத எம்.ஜி.ஆர். , இந்திராவின் இறுதி ஊர்வலக் காட்சிகள் அடங்கிய அந்த வீடியோவைப் பார்த்து விட்டு , தேம்பி தேம்பி சிறு பிள்ளை போல் அழுதிருக்கிறார். காரணம் தன் உயிரைக் காப்பாற்ற ஓடோடி வந்த இந்திராகாந்திக்கு நன்றி சொல்ல எம்.ஜி.ஆர். உள்ளம் துடிக்கிறது.
ஆனால் இந்திரா இப்போது உயிரோடு இல்லை.
பக்கத்தில் இருப்பவர் யாரிடமாவது இதை சொல்லி வாய் விட்டு அழலாம் என்றால் கூட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆருக்கு வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லை. இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் , மௌனமாக தனக்குள் அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் எம்.ஜி.ஆரால்..?
Paranji Sankar


