புத்தாண்டு தொடங்க இருக்கும் நேரத்தில் மகிழ்ச்சியான செய்தி. அதுவும் பெங்களூருவாசிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. புத்தாண்டு பிறந்ததும் 2-1-26 வெள்ளிக்கிழமை முதல் பெங்களூருவில் வீரநடை போட வருகிறார் வேங்கையன். அங்குள்ள விவேக்நகர் பாலாஜி திரையரங்கில் அடிமைப்பெண் வெளியாகிறது. பெங்களூரு நண்பர்கள் சி.எஸ். குமார் அவர்கள், எஸ்.வினோத் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.
தமிழகத்தில் சென்னையில் இதயக்கனி வெள்ளிவிழாவைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் பல ஊர்களில் மக்கள் திலகத்தின் பல படங்கள் வெற்றிகரமாக ஓடுவதை அவ்வப்போது பதிவு செய்து வருகிறோம். தமிழகத்தைத் தாண்டி கர்நாடக மாநிலத்திலும் மக்கள் திலகத்தின் புகழ்க் கொடி பறக்கிறது. 2025ல் மட்டும் பெங்களூரில் மக்கள் திலகத்தின் 6 படங்கள் திரையிடப்பட்டுள்ளன. அதுவும் அடிமைப்பெண் படம் ஜூன் மாதம் 13 ம் தேதி பெங்களூரு அருணா அரங்கில் திரையிடப்பட்டு ஒருவாரம் ஓடியது. ஆறே மாதத்தில் மீண்டும் பெங்களூருவில் அடிமைப்பெண் திரையிடப்படுகிறது என்றால் வரவேற்பை புரிந்து கொள்ளலாம்.
வேறு எந்த நடிகர்களின் படங்களும் மறுவெளியீட்டில் இதுபோல தமிழகத்தில் மட்டுமன்றி பெங்களூருவிலும் சாதனைகள் செய்தது இல்லை.
"பசித்தவன் பழங்கணக்கு பார்த்தானாம்..." என்று ஒரு பழமொழி உண்டு. பட்டினியோடு இருக்கும் ஒருவன் என்ன செலவுகள் செய்தோம், தனக்கு ஏதாவது மீதிப் பணம் வரவேண்டி இருக்கிறதா? வந்தால் பசியைப் போக்கிக் கொள்ளலாமா? என்று ஏங்கியபடி பழைய கணக்கு பார்ப்பவனை பற்றிச் சொல்வதற்கான பழமொழி இது.
அதுபோல ஒரு காலத்தில் தனது வசதிக்குத் தக்கபடியான விருந்து சாப்பிட்டு இன்று பட்டினியோடு இருந்து, காலிப் பெருங்காய டப்பாவை முகர்ந்து பார்த்து பழைய நினைவுகளில் ஏங்கிக் கொண்டு, "ஏற்கனவே சாப்பிட்டது ஜெரிக்கவில்லை, அதனால் விரதம்" என்று கவுரவமாக பட்டினிக்குப் புது விளக்கம் சொல்லும் நிலையில் நாம் இல்லை. நமக்கு அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் அறுசுவை விருந்துதான். அந்த விருந்தை அனுபவித்து ரசித்து உண்பதோடு அது ஜெரிமானம் ஆகும் ஆரோக்கியமும் வலிமையும் நமக்கு உண்டு.
மக்கள் திலகத்தின் படங்கள் காலிப் பெருங்காய டப்பா அல்ல. மக்களை மகிழ்வித்து விநியோகஸ்தர்களுக்கு இன்றும் அள்ளி அள்ளிக் கொடுக்கும் அட்சய பாத்திரங்கள். அதற்கு இன்னொரு உதாரணம்தான் தமிழகத்தில் கூட அல்ல, பெங்களூருவில் அதுவும் ஆறே மாதங்கள் இடைவெளியில் வெளியாகும் அடிமைப்பெண்.
எல்லாம் சரி. அதற்கு எதற்கு குலேபகாவலி படம் போட்டிருக்கிறேன்.. என்று நீங்கள் நினைக்கலாம். சொல்கிறேன்.
குலேபகாவலி படத்தில் மக்கள் திலகத்தின் இந்த கம்பீரமான ஸ்டைலான போஸ் என்னை...... என்னை என்ன? நம் நெஞ்சை அள்ளும். இந்தப் படம் வெளியாகி 9 ஆண்டுகள் கழித்து இதேபோல வில்லை ஏந்தியபடி மேல் படியில் ஒருகாலும் கீழ்படியில் ஒரு காலுமாக 1964ல் வந்த ஒரு படத்தில் ஒரு நடிகர் போஸ் கொடுத்திருப்பார். அதற்கும் மக்கள் திலகமே முன்னோடி. அது போகட்டும்.
குலேபகாவலியில்... வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி பெற்றார் பகடையிலே.. அற்புதமான பாடல். ஆனால், படத்தில் அந்தப் பாடல் வரியை பொய்யாக்கி பகடை விளையாட்டில் சதியை முறியடித்து மக்கள் திலகம் வெற்றி பெறுவார்.
வாழ்க்கையே விளையாட்டுதான். சினிமாவும் அரசியலும் கூட வாழ்வின் ஒரு பகுதி. எவ்வளவோ போட்டிகள், சதிகள் வரும். திறமையுடனும் சாதுர்யமாகவும் செயல்பட்டு அவற்றில் வெற்றிபெற வேண்டும். அப்படி செயல்பட்டு சினிமா, அரசியல் என இரண்டிலும் வெற்றி பெற்றவர் மக்கள் திலகம்.
சினிமாவில் மக்கள் திலகம் வெற்றி பெற்றதை மறுவெளியீட்டு சாதனைகள் மூலம் இன்றும் நிரூபித்து வருகிறார்.
அரசியலிலும் அவர் இருந்தவரை மட்டுமல்ல, இப்போதும் வெற்றி பெறுகிறார். நேற்று கட்சி ஆரம்பித்த விஜய் கூட மக்கள் திலகத்தை புகழ்ந்து பேசிவருகிறார். மக்கள் திலகத்தின் நினைவு நாளில் அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் திரண்டு மீண்டும் புரட்சித் தலைவர் ஆட்சி அமைப்போம் என்று உறுதிமொழி ஏற்கிறார்கள்.
அவ்வளவு ஏன்?... முதல்வர் ஸ்டாலினே கூட கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது "நான் எம்.ஜி.ஆர்.ரசிகன்" என்று கூறி மக்கள் திலகத்தின் பாடல்களை பாடி ஓட்டுக் கேட்டார். தற்போது பிரச்சாரம் தீவிரமடையும் நிலையில், மீண்டும் கூட அவர் அப்படிச் சொல்லலாம். இப்படி ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அரசியலில் எதிர் நிலையில் உள்ளவர்கள் கூட மக்கள் திலகத்தின் புகழ் பாடுகிறார்கள்.
ஆனால், ஒருவராவது "கருணாநிதி ஆட்சி அமைப்போம்" என்று சொல்கிறார்களா? திமுக தலைவராக இருக்கும் முதல்வர் ஸ்டாலினே அப்படிச் சொல்வது இல்லை. சொல்லமாட்டார்.
ஆனால், சினிமாவிலும் அரசியலிலும் இன்றும் சக்கரவர்த்தியாக, போற்றப்படுபவராக, கொண்டாடப் படுபவராக மக்கள் திலகம் விளங்குகிறார்.
வில்லை ஏந்திய அந்த ராமச்சந்திரனுக்கு மட்டுமல்ல, இங்கே வில்லை ஏந்தி நிற்கும் இந்த ராமச்சந்திரனுக்கும் என்றுமே வீழ்ச்சியில்லை. எப்போதும் வெற்றிதான்.
(ஸ்ரீதர் சுவாமிநாதன் பதிவு)


