பட்ஜெட் படங்களின் நாயகர்கள் என்றால், சுதாகர், மோகன், ராமராஜன் போன்றோரை சொல்லலாம். இவர்கள் மூவருக்குமிடையில் இன்னொரு ஒற்றுமை... இவர்களின் பல படங்களில் பாடல்களை ஹிட்டடிக்க வைத்த பெருமைக்குரியவர் இசைஞானி இளையராஜா! ❤
கிழக்கே போகும் ரயிலில் தன் பயணத்தை தொடங்கிய சுதாகரின் பல படங்கள், இளையராஜாவின் இசையால் பேசப்பட்டன. 'மலர்களிலே ஆராதனை'
'மீன்கொடி தேரில் மன்மதராஜன்' இந்த இரண்டு பாடல்களும் இன்றுவரை பலராலும் ரசிக்கப்படும் பாடல்கள்! (எனது ஃபேவரிட் லிஸ்ட்டிலும் இப்பாடல்கள் உள்ளன) இப்பாடல்கள் இடம்பெற்ற கரும்புவில் என்ற திரைப்படத்தில் சுதாகர், சுபாஷினி நடித்துள்ளனர். இப்படத்தில் தான் வினுச்சக்கரவர்த்தி அறிமுகம்!
1980-ல் வெளியான கரும்புவில் திரைப்படம் அவ்வளவாக ஓடவில்லை, ஆனால் படத்தில் இடம்பெற்ற பாடல்களில் இவ்விரு பாடல்களும் சூப்பர்ஹிட்! இதில், 'மீன்கொடி தேரில்' பாடலை, ஜேசுதாஸ் தனித்தும், ஜென்சி தனித்துமாகப் பாடி, இரு பாடல்களாக இடம்பெற்றுள்ளது.
'மலர்களிலே ஆராதனை' பாடலை எஸ்.ஜானகியும், மலேசியா வாசுதேவனும் இணைந்து பாடியிருப்பார்கள். மலேசியா வாசுதேவனின் மெலோடிகளில் இப்பாடலுக்கு தனியிடம் உண்டு!
இப்பாடலின் இன்னொரு சிறப்பென்றால், குறைவான சொற்களால் கங்கை அமரனால் எழுதப்பட்ட கவித்துவமான பாடல் இது! ❤
இப்பாடலின் பல்லவியில்,
//மலர்களிலே ஆராதனை
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை//
மொத்தம் 9 சொற்கள் தான்... அதேபோல் சரணமும் சிறியது தான், ஆனால் பாடல் நீளமாகச் செல்வதாக இருக்கும்.. எல்லாம் இளையராஜாவின் வித்தை! ஒவ்வொரு சொல்லையும் ராகத்தோடு இழுத்துப் பாடுவதாக இருக்கும். அதேபோல் இப்பாடலின் அழகியலில் கோரஸ் மிகமுக்கிய பங்கு வகிக்கும்! பாடலின் தொடக்கம் முதல், ஒவ்வொரு சரணத்திலும் கோரஸ் இருக்கும்... அதுவும் இப்பாடலின் நீளத்தை அதிகரிக்கும்!
ஒரு பாடலால் நம் மனதை மயக்க முடியுமா??? மயக்க முடியும் என நம்பவைக்கும் பாடல் இது!! நம் மனதை கட்டிப்போட்டுவிடும்!! ❤
(எச்சரிக்கை: பாடலை விஷூவலாகப் பார்த்தால் கடுப்பாகிவிடும்! இப்பாடலுக்கென நம் கற்பனையில் வரையும் சித்திரத்தை சிதைத்துவிடும்!!)
- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்


