1946 -கோவை ராமநாதபுரம்.... தேகப்பயிற்சி சாலையில் வியர்வையில் மின்னும் கருந்தேக்கு உடம்பில், ஒரு இளைஞர் உடற்பயிற்சி செய்கிறார்.
சென்ட்ரல் ஸ்டுடியோவில் மாதச் சம்பளத்தில் நடித்து வந்த ஒரு நடிகர் அதை வேடிக்கை பார்க்கிறார்.
இருவரும் நண்பராகிவிடுகிறார்கள்.
படத்தில் தன்னோடு சண்டைக் காட்சியில் நடிக்க, கருந்தேக்கு உடம்புக்காரருக்கு இவர் சிபாரிசு
செய்கிறார். ஒரு நாள் நடிகர் குடியிருந்த வாடகை வீட்டு வழியே, கருந்தேக்கு வர- 'எங்கப்பா காலையில போன ஒன் சிநேகிதனை இன்னும் காணோம். மத்தியான சமையலுக்கு, அவன் சம்பளம்
வந்தாத்தான் மார்க்கட்டுக்குப் போய் அரிசி பருப்பு வாங்கியாரணும்' - என்றார் நடிகரின் தாயார்.
'இதோ வந்திட்டேம்மா'- என்று சொல்லி விட்டு, பக்கத்து தெருவில் உள்ள சொந்தக்காரர் வீட்டுக்குள் போய் - 'பேச்சீம்மா, ஒரு கிளாஸ் தாளிச்ச மோர் கொண்டா'- என்றார்.
மோர் வருவதற்குள் -மலபார் ரிசர்வ் போலீஸ் போடுகிற மாதிரியான அரை டிராயர் பாக்கட்டில்-அந்த வீட்டு மூட்டையிலிருந்து எடுத்து ஒரு பக்கம் ஒரு லிட்டர் அரிசி, மறுபக்கம் பருப்பு நிரப்பிக்கொண்டு, தாளித்த மோரில், தாக சாந்தி செய்துவிட்டு, நடிகரின் தாயாரிடம் அதைச் சேர்த்தார்.
அம்மா சமையலுக்கு என்ன செய்திருப்பார்களோ என்று தவித்தவாறு வீடு வந்த நடிகருக்கு 'கம கம' என்று சமையல் வாசனை ! 'எப்படிம்மா சமையல்? ' - என்று நடிகர் கேட்க , 'உன் பயில்வான் சிநேகிதன் வாங்கியாந்தான்' - என்றார் அம்மா.
அவில் கொடுத்த குசேலனை
குபேரனாக்கினார் கிருஷ்ண பரமாத்மா !
அரிசி கொடுத்த நண்பனை
கோடீஸ்வரனாக்கினார் நடிகர் !!
கருந்தேக்கு உடம்புக்காரர்
அண்ணன் சாண்டோ சின்னப்பா தேவர்.
அன்னையார் சத்யபாமா. நடிகர் - யார் என்று சொல்லவேண்டியதில்லை- நாடாண்ட முதல் நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள்.
- நடிகர் சிவகுமார் பக்கத்திலிருந்து


