TamilsGuide

எம்ஜிஆர் கோவை வருகிறார் என்றால் எங்கெங்கே கூட்டம் கூடி நிற்கும் எனத் தெரியாது. 

--எம்ஜிஆர் கோவை வருகிறார் என்றால் ஒண்டிப்புதூரில் திருச்சி சாலை முழுக்க எங்கெங்கே கூட்டம் கூடி நிற்கும் எனத் தெரியாது.
பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டேண்ட், ஜானகி கிணறு, காமராஜர் சிலை, செக்போஸ்ட் முக்கு, ரயில்வே கேட் என திக்குக்கு திக்கு ஒரே கசமுசாதான்.
இதில் கூட்டம் ஆயிரக்கணக்கில் நிற்பது ரயில்வே கேட்தான். அந்தக் காலத்தில் அதுதான் மாட்டுப்பேட்டை.
வியாபாரிகள், விவசாயிகள் அதிகமாக நிற்பர். 1-ஏ, 1-சி, எஸ்-1, எஸ்-2, எஸ்-9 போன்ற நகரப்பேருந்துகள் திரும்பி நிற்கும் இடமும் இதுதான்.
இங்கே மரக்கடை, தீவனக்கடை, தவிடு, புண்ணாக்கு கடை, டீ-வடை-போண்டா கடை, ராஜன் ஹோட்டல், பழனிமலை வக்கிப்பில் கடை பிரபலம்.
அதை விட முக்கியமாக எம்ஜிஆரை வரவேற்க இங்கே அதிகமாக கூட்டம் கூடுவதற்கு அதி முக்கியமான காரணம் அடிக்கடி ரயில்வே கேட் போட்டு விடுவார்கள்.
எம்.ஜி.ஆர் மற்ற இடங்களில் மக்களுக்கு டாடா காட்டி விட்டு சென்றாலும் இங்கே ரயில்வே கேட் போட்டால் (இன்றைக்கு மேம்பாலம் ஆகி விட்டது. இதன் அத்தனை அடையாளங்களும் மாறி விட்டது) எப்படியும் மாட்டிக் கொண்டாக வேண்டும்.
அப்போது அவர் வேனில் ஏறி மாலை போடுபவர்கள், அவர் கைப் பிடித்து குலுக்கியவர்கள், கைப்பிடித்து முத்தம் கொடுத்தவர்கள், அவர் கன்னத்தை தொட்டு முத்தம் கொஞ்சியவர்கள், அவரை கட்டிப்பிடித்த கிழவிகள், கிழவன்கள், அவர் மாலை வீசியெறிவதை தாங்கியவர்கள் இப்படி நிறைய பேர் கதைகள் அடுத்தநாள் தண்ணீர் பைப்படியில் பெண்களும், பள்ளிகளில் பசங்களும் பேசுவது என்பது வாடிக்கையாக இருந்ததால் அது பெரிய விளம்பரமும் ஆகி விட்டிருக்கும்.
அதனால் ஒண்டிப்புதூர் சுங்க மைதானம், அடப்பக்காடு, செங்காடு, தண்ணீர் தோட்டம் வீதி, அப்பாநாயக்கர்காடு, நெசவாளர் காலனி, நாகையன் தோட்டம் என சகல திக்கிலிருந்தும் மக்கள் கூடி விடுவார்கள்.
சில சமயம் தூரத்தே எம்ஜிஆர் வேன் தென்படுவது தெரிந்தால் இங்கேயே சில பேர் ஓடிப் போய் ரயில்வே கேட்டை மூடி விடுவார்கள். சிலர் அதற்கு முன்பே ரயில்வே கேட்கீப்பருக்கு பணம் கொடுத்து கேட் மூட வைத்தும் விடுவார்கள்.
அந்த சமயங்களில் காமராஜர் சிலை, பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டேண்ட், ஜானகி கிணறு பகுதியில் கூடியிருக்கும் ஜனங்கள் மொத்தமும் தறிகெட்டு திக்குக்கு திக்கு திருச்சி சாலையில் ஓடி வருவதை காண கண்கோடி வேண்டும்.
இவர்களில் எல்லாம் பெரும் யோகக்காரராக தெரிந்தவர்தான் ஓ.பி.ராமன். (முன்னாள் அமைச்சர் ஓ.பி.ராமனையும், இவரையும் நாங்கள் ஒன்றாக நினைத்ததெல்லாம் ஒரு அறியாப்பருவம்)

யாரந்த ராமன். அவர் பெயர் ராமன். ‘ஒ’ என்பது ஒண்டிப்புதூரை குறிக்கும் சொல்லாக இருக்கலாம். பி என்பது இன்ஷியலாக இருக்கும். அவரின் பெயர் ராமன் (ஒருவேளை இவரின் பெயரும் ராமச்சந்திரனாக இருக்கலாம். ஜாதியின் காரணமாக சமூகம் அவர் பெயரை ராமன் என்று மருவி விட்டிருக்கலாம்) என்பது கூட எம்ஜிஆர் என்கிற எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு தெரியுமா தெரியவில்லை.
எங்கிருந்தோ பறந்து வருவார். கட,கடவென எம்ஜிஆர் வேனின் மீது தவ்வி ஏறி விடுவார். ‘வாத்தியார் வாழ்க!’ என கோஷமிட்டு தான் சுமந்து வந்த மலர் மாலையை சாற்றி விடுவார்.
அதில் பூரிப்பு பொங்கிய எம்ஜிஆர் அப்படியே, அவரைக் கட்டிப்பிடித்து உச்சி மோந்து, அந்த மாலையை ஓ.பி.ராமனுக்கே சாட்டிவிடுவார்.
இது ஒரு முறை இரண்டு முறை நிகழ்ந்தததல்ல. பல முறை நானே கண்ணால் கண்ட காட்சி.
ஒரு முறை பார்வதி கிருஷ்ணனுக்கு பிரச்சாரத்திற்காக வருகிறார் எம்ஜிஆர். தொப்பி இருக்கு. கண்ணாடி இல்லை. இந்த ராமன் கரு, கரு உருவம். மொட்டை வேனின் மீது தவ்வி ஏறி எம்ஜிஆருக்கு ஒரு சால்வையே போடுகிறார்.
அதுதான் நான் முதன்முதலாக ராமனையும், எம்ஜிஆரையும் கண்ட காட்சி.
‘வாத்தியாரை இந்த கையிலதான் தொட்டேன். இந்த கையத்தான் வாத்தியார் புடிச்சார். இந்த மூக்காலதான் அவரை மோந்து பார்த்தேன். அவர்கிட்ட என்ன மணம் தெரியுமா?’ என்று அவர் பலபேரிடம் பரவசப்பட்டு சொல்வதை கேட்டிருக்கிறேன்.
ராமன் மீது அங்கே இருக்கும் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு செம பரிவு. ‘எப்போ வந்தாலும் ராமா நீ இந்த கடையில எம் பேரை சொல்லி டீ சாப்பிட்டுக்கலாம். டிபன் சாப்பிட்டுக்கலாம்!’ என்று கணக்கு ஓப்பன் பண்ணி கொடுத்ததையும் கண்டிருக்கிறேன்.
ராமனுக்கு ஆதாரம் ஒற்றை மாடு பூட்டிய ஒரு கட்டை வண்டி. அதில் கிடைக்கிற கூலிக்குப் போவார்.
அவர் ஏற்றி வரும் பொருட்களுக்கு ரூ.2 கேட்டால், 50 பைசாதான் தருவேன்னு சொன்னவர்கள் நிறைய.
‘நீங்க கொடுக்கிறதை கொடுங்க சாமீ!’ என்று வாங்கிப் போனதும் உண்டு.
சிலரிடம், ‘இதுக்குத்தான் உங்ககிட்ட ரேட் பேசாம வரக்கூடாதுன்னு!’ திட்டிட்டே போவதும் உண்டு.
ராமனின் வீடு சின்னக்குடிசைதான். ஒண்டிப்புதூர் சுங்க மைதானம் அருகே உள்ள மதுரைவீரன் கோயில் வீதியில் இருந்தது.
எம்.ஜி.ஆர் கட்சிக்காரர் கையில் கட்சி சின்னத்தை பச்சை குத்திக் கொள்ளச் சொன்னபோது முதல் ஆளாக கட்சிக் கொடியோடு, பச்சை குத்திக் கொண்டார்.
கத்தி வைத்துக் கொள்ளச் சொன்னபோது கத்தியும் வைத்துக் கொண்டார்.
இவங்களுக்கு ஓட்டுப்போடுங்க என சொன்னார். வீடு வீடாக கொடியேந்திப் போய் அவங்களுக்கு ஓட்டுக் கேட்டார்.
ஒண்டிப்புதூரில், சிங்கநல்லூர் சட்டசபை, கோவை மக்களவைத் தொகுதிகளுக்கு கவுண்டர், நாயக்கர், செட்டியார், குரும்பர் ஜாதிகளிலிருந்தெல்லாம் கவுன்சிலர்கள், எம்.எம்.ஏக்கள், எம்.பிக்கள் பலர் வந்து சென்று விட்டார்கள்.
இவ்வளவு ஏன் அதிமுக கட்சிக்கு உள்ளூர் முதல் மாவட்டம் வரை கட்சி செயலாளர், அவைத்தலைவர், பொருளாளர் என ஆகி சென்றிருக்கிறார்கள்.
அவர்கள் எல்லாம் ராமனைப் போல் விசுவாசியாக இருந்திருக்கவே முடியாது என்பேன்.
ஆனால் இந்த ராமன் ஒரு வட்ட செயலாளர் பதவியையாவது அனுபவித்திருப்பாரா என்று தெரியாது.
எம்ஜிஆர் இறந்து ஜானகி, ஜெயலலிதா அணி என்று பிரிந்து நின்றபோது ஜெயலலிதா பக்கம் நின்றிருந்தார்.
உடைந்த கட்சிகள் ஒன்றான பின்பு ஜெயலலிதாவே விசுவாசியாகவே நின்றிருக்கிறார்.
அப்படியானவரை ஏழெட்டு மாதங்களுக்கு முன் மக்களவைத் தேர்தலுக்காக சிங்காநல்லூரில் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றில் பார்த்தேன்.
அது வாஜ்பாய் இறந்த சமயம். கூட்டம் பாதியில் அஞ்சலி செலுத்தி தள்ளி வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அந்த மாபெரும் மண்டபத்தில் திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த அரங்கில் பிரியாணி பரிமாறலில் பங்கேற்கத்தான் அந்த திமிலோகம்.
அந்த கூட்டத்தில் கூட்டமாக நம்ம ஓ.பி. ராமன். கூட அவர் மனைவியோ..? ரெண்டு பேரும் ரொம்ப தளர்ந்திருந்தனர். வயோதிகத்தின் சுவடு.
ஆனால் அடுத்த மண்டபத்திற்கு தாவுவதில் வேகம். எனக்கு சட்டென்று பழைய நினைவுகள் அலையடித்தது. பார்வதி கிருஷ்ணன் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆரை தவ்விப் பிடித்து மாலை போட்ட ராமன்...
‘‘ராமன் என்னைத் தெரியலையா?’’ கேட்கிறேன்.
‘‘பார்த்த மாதிரி நியாபகம்ங்க. நீங்க நம்ம ஒண்டிப்புதூர்தானுங்க!’’
‘‘ஆமாம்!’’ என்று மேலும் பேச எத்தனிப்பதற்குள் அவருக்கு அவசரம்.
‘‘அப்பறம் பார்க்கலாம்ங்க. பேசலாங்க. வாங்க சீக்கிரம்...!’’ கூட இருந்த பெண்மணி அவசரப்படுத்துகிறார். பிரியாணி மண்டபத்தை நோக்கி இருவரும் என்னை சட்டை செய்யாமல் ஓடுகிறார்கள்.
மனதில் இழையோட்டம். எம்ஜிஆரே உயிராய் வாழ்ந்த இந்த தொண்டனின் வீடு இப்போது எப்படியிருக்கிறது. இவர் குடும்பம் எப்படியிருக்கிறது?
ஈபிஎஸ், ஓபிஎஸ், எஸ்.பி.வி என எத்தனையோ ஆயிரம் பேரை பதவிகளிலும் பணத்திலும் குளிப்பாட்டிய எம்ஜிஆர் என்கிற குறியீடு இவருக்கு என்னதான் செய்திருக்கிறது.
இன்றைக்கும் ஒரு பிரியாணிப் பொட்டலத்திற்குத்தான் அலைய வைக்கிறது என்றால் அதற்கு காரணம் இவரின் பொருளாதாரப் பின்னணியா? ஜாதியா? படிப்பில்லாத கூறா? அப்படி சொல்ல முடியாது.
ஏனென்றால் படிப்பே இல்லாத, பொருளே இல்லாத, இவர் ஜாதியை (அருந்ததியர் சமூகம்) சேர்ந்தவர்கள் எத்தனையோ பேரை பதவி மற்றும் பணத்தால் அலங்கரித்த கட்சி. இவரை மட்டும் ஏன் இப்படி வைத்திருக்கிறது?
சில நாட்கள் கழித்து ஒண்டிப்புதூரில் இவர் வீட்டை தேடி செல்கிறேன். அதே சுங்க மைதானம். மதுரை வீரன் கோயில் தெரு. முனியப்பன் கோயில் அருகே ஒரு சின்ன வீடு. அதில் அதிமுக ரெட்டை இலை கொடி பறக்கிறது.
அதை ஒட்டி சந்துகளுக்குள் இன்னமும் சிற்சில சின்ன வீடுகள். நான் விசாரித்ததும் சில பெண்கள் எட்டிப் பார்க்கிறார்கள்.
‘‘ராமனுங்களா, இதா இவங்க தாத்தாதான்!’’ என சிலரை கைகாட்டுகிறார்கள். அந்த சிறுமிகள் ஒரு பெண்மணியிடம் அழைத்துப் போகிறார்.
‘‘அம்மா தாத்தாவைப் பார்க்க வந்திருக்காங்க!’’ அந்த பெண்மணி பயப்படுகிறார். விஷயத்தை சொல்லுகிறேன்.
‘‘ஊட்டியில ஒரு கூட்டம். அப்பா போனாரு. அங்கே ஒரு ஆக்சிடெண்ட். இடுப்பு ஒடிஞ்சுடுச்சு. இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் பத்து நாளா படுக்கை!’’ என்கிறார்.
‘‘அவரை கட்சிக்காரங்க பார்த்தாங்களா? ஏதாச்சும் உதவி செஞ்சாங்களா?’’
‘‘அவங்கதான் சொல்லி ஈஎஸ்ஐயில சேர்த்திருக்காங்க. கூட எங்க அக்கா இருக்கு!’’
‘‘சரி, அவர் படுத்திருக்கிற வார்டு சொல்லுங்க!’’
‘‘அதெல்லாம் தெரியாது. நீங்க அங்கேயே போய் கேட்டுக்குங்க!’’
கதவைச் சாத்திக் கொள்கிறார் அப்பெண்மணி. அங்கே நின்ற பேத்தியாகப்பட்ட சிறுமியிடம் விசிட்டிங் கார்டை கொடுத்து, ‘இதை உங்க மாமா வந்தா கொடு, பேட்டிக்கு வந்தாங்கன்னு சொல்லு. நான் ஆஸ்பத்திரிக்கே போய்ப் பார்க்கிறேன்னு சொல்லு!’’ கூறிவிட்டு வருகிறேன்.
ஒரு மாத காலம். எந்த பதிலும் இல்லை. திரும்ப ஒண்டிப்புதூர் போகும்போது அந்த வீட்டிற்கு செல்கிறேன். வேறொரு பெண்மணி.
‘‘இன்னமும் அவர் ஆஸ்பத்திரியிலதானுங்க. இன்னும் எந்திரிக்கலை!’’
‘‘அன்னெய்க்கு வந்தேனே. போன் நெம்பர் கொடுத்தேனே... பேசச் சொன்னேனே...!’’ என்கிறேன்.
அவர் யார் யாரையோ கூப்பிடுகிறார். அதில் தலைகாட்டிய பெண்கள், ‘‘ஆமாம் சொன்னோம். அதெல்லாம் எதுவும் வேண்டாம்ங்கிறாங்க. கட்சிக்காரங்க அவரை நல்லா வந்து பார்த்துக்கிறாங்க!’’ என்று மென்று விழுங்கினார்.
‘‘சரிம்மா, அவர் எந்த பெட்ல இருக்கார்; சொல்லுங்க விசாரிச்சுப் பார்த்துக்கிறோம்!’’
‘‘அதை நீங்களே அங்கே போய் விசாரிச்சுக்குங்க!’’
‘‘ராமன் எம்ஜிஆர் வரும்போது அந்தக்காலத்துல மாலை போடுவாரே. அது எல்லாம் போட்டோ இருக்கா?’’ எனக் கேட்கிறேன்.
‘‘அது எங்கீங்க? ஒரு தடவை நம்ம வார்டு செயலாளர் கவுண்டரு எல்லாத்தையும் கொடு. பதவி வாங்கிக் கொடுக்கிறேன்னு வாங்கீட்டு போனார். அப்புறம் அது திரும்பி வரவேயில்லை. எந்த பதவியும் வரவும் இல்லை!’’ என்கிறார்.
‘‘அதுல ஒரு ஃபோட்டோ கூட இல்லையா?’’
‘‘இல்லையே!’’
அதற்கு மேல் யாருமே பேச விருப்பப்படவில்லை. நானும் அதற்குப் பிறகு அவரைப் பற்றிய விசாரணையில் நாட்டமற்றுப் போகிறேன். ஃபோட்டோ ஆதாரம் கூட இல்லாமல் அவரைப் பற்றி பத்திரிகையில் என்ன எழுதுவது?
மனசு கேட்காமல் வேறொரு சமயம் சிங்காநல்லூர் ஈஎஸ்ஐ போய் பார்க்கிறேன். விசாரிக்கிறேன்.
‘‘அப்படியா, யாரும் இல்லையே!’’ ஒரு கட்டத்தில் விசாரிப்பதை விட்டு விட்டு வெளியேறுகிறேன்.
எம்ஜிஆர் நினைவாக ஓவியர் ஜீவா ஒரு பதிவை இட்டிருந்தார்.
அதைப் படித்தவுடன் எனக்கு ஏனோ எம்ஜிஆருடன் இந்த ஓ.பி.ராமனின் நினைவும் கூடவே அலைக்கழித்து பதிவிடத் தோன்றியது. பதிவிட்டுள்ளேன்.
- கா.சு.வேலாயுதம் | தமிழ் இந்து

 


 

Leave a comment

Comment