முகவின் ‘வேர்' எப்படிப்பட்டது என்பதற்கு, மதுரை நரிமேட்டைச் சேர்ந்த ‘கருப்புச்சட்டை பாய்’ மு.அப்துல் சலாம் (50) ஒரு உதாரணம்.
“15 வயசுல திமுக கூட்டத்தப் பாத்துட்டு, மேடைப்பேச்சுல மயங்கி அப்பவே திமுக காரனாகிட்டேன். நம்ம தொழிலுக்கு (மரக் கரி வியாபாரம்) ஓடிக்கிட்டே இருக்கணும். ஆனாலும், மதுரையில இருந்து ஒரேநாள்ல போய்த் திரும்புற தூரத்துல எங்க மாநாடு நடந்தாலும் போயிடுவேன்.
ஒரு கட்டத்துல, கலைஞரே இவ்ளோ அறிவாளின்னா அவரோட தலைவர் எப்பிடியிருப்பாருன்னு அண்ணாவப் பத்துன புஸ்தகங்களை வாங்கிப்படிச்சேன். அண்ணாவோட தலைவரான பெரியாரைப் படிச்சிப் பிரமிச்சி, கருப்புச் சட்டை போட்டேன். இத்தனைக்கும் நான் படிச்சது மூணாவதுதான். ஆனா, வீட்ல மூட்டை மூட்டையா புஸ்தகங்கள் இருக்கு.
ஒரு தடவை நான் இல்லாத நேரத்துல, புஸ்தகத்தைப் பூராம் பழைய பேப்பர்காரன்கிட்ட போட்டுட்டாங்க என் பொண்டாட்டி. ஆத்திரத்துல மூணு நாளா சாப்பிடலை. ஒவ்வொரு கடையாப் போய் விசாரிச்சேன். ஒரு கடைக்காரரு, ‘பாய், நீங்க எப்படியும் தேடி வருவீங்கன்னு தெரியும். உங்க புஸ்தகம் பூராம் பத்திரமா இருக்கு. காசே வேணாம். எடுத்துக்கோங்க’ன்னாரு. அவரும் எங்க கட்சிக்காரருதான்.
கட்சிகிட்ட எந்த எதிர்பார்ப்பும் இல்லாம ஒழைக்கிற என்னை மாதிரி தொண்டன்தான் திமுகவோட ரத்தம், நாடி, நரம்பு எல்லாம். ‘யாரோ அமைச் சராவதுக்கு நீங்க ஏன்டா உயிரைக் குடுக்கீங்க’ன்னு கேட்பாய்ங்க. ‘இந்த தன்மானத்தையும், தனி மனித சுதந்திரத்தையும் வேற எந்தக் கட்சிய்யா எங்களுக்குத் தரும்?’னு சொல்லுவேன். திமுகன்னா சுயமரியாதை. சாகும்வரை சுயமரியாதையோடதான் இருப்பேன்.”
- தி இந்து .


