TamilsGuide

தம்பியை கலைத் துறைக்குத் தயார் செய்தவர்...

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் சகோதரர் பெரியவர் சக்கரபாணி. தம்பியை கலைத் துறைக்குத் தயார் செய்தவர்.

அ.தி.மு.க. துவங்கிய காலத்தில் அவரும் பல பொதுக் கூட்டங்களுக்குச் சென்றார்.

அ.தி.மு.க.விற்கு அரசியல் திருப்பு முனை ஏற்படுத்தியது திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல்தான். அதன் பிரச்சாரப் பணியிலும் பங்கு பெற்றார்.

மறைந்த பாலகுருவா ரெட்டியாரும், பரமனும்தான் அவரைப் பொதுக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

தற்போது சென்னை லாயிட்ஸ் சாலையில் செயல்படும் அ.தி.மு.கழகத் தலைமைக் கட்டிடம் வி.என். ஜானகிக்குச் சொந்தம். அதனைக் கழகத்திற்காக எம்.ஜி.ஆர். எழுதி வாங்கினார்.

அந்தக் கட்டிடத்தின் பின் பகுதியில்தான் ஆரம்பத்தில் அண்ணா நாளேட்டின் அலுவலகமும் அச்சகமும் செயல்பட்டன.

அந்தக் கட்டிடத்திலிருந்து சில கட்டிடங்கள் தள்ளி எம்.ஜி. சக்கரபாணியின் இல்லம்.

ஒருநாள் அவருடைய பணியாளர் வந்தார். ஐயா அழைக்கிறார் என்றார். 'அண்ணா’ அலுவலகத்திலிருந்து சென்றோம். தமது அருகிலிருந்தவர்களைப் பெரியவர் போகச் சொன்னார். எதிரே நாற்காலியில் அமரச் சொன்னார்.

'தம்பியிடம் நீங்கள் பேசவேண்டும்'

'ஏன்? உங்கள் மீது உங்கள் தம்பி மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். நீங்களே பேசலாமே?' என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

'இந்த விஷயத்தை நான் பேச முடியாது. நீங்கள்தான் பேசவேண்டும்' என்றார்.

'சரி' என்றேன்..

சுற்றும் முற்றும் பார்த்தார். சற்று குரலை இறக்கி,

'என்னை கழகப் பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கச் சொல்லுங்கள்' என்றார்.

அப்போதைக்கு அவருடைய கோரிக்கை நியாயமானதாகத்தான் தெரிந்தது. தம்பியிடம் அண்ணன் இமாலய வரம் கேட்டு விட்டாரா?

சரி என கூறிவிட்டு விடைபெற்றேன். அறை வாசல்வரை வந்தார்.

'சோலை, தம்பி நல்ல மூடில் இருக்கும்போது பார்த்துப் பேசுங்கள்' என்றார். ஒரு வெண்கலச் சிரிப்பு.

கழகத்தில் அவர் மாநில அளவில் ஒரு பதவி கேட்கவில்லை.

செயலாளர் பதவி கேட்கவில்லை.

கழகத்தை மண்டலங்களாகப் பிரிக்கச் சொல்லவில்லை. அதில் தன்னை ஒரு மண்டலத்திற்கு அதிபதியாக நியமிக்கச் சொல்லவில்லை.

ஐநூறுக்கு மேற்பட்டோர் இடம் பெறும் மாநிலப் பொதுக்குழுவில் தன்னையும் ஒரு உறுப்பினராக நியமிக்கச் சொன்னார்.

அடுத்த சில தினங்களில் ஆற்காடு சாலை அலுவலகத்தில் அமரர் எம்.ஜி.ஆரை சந்தித்தோம். உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். உரையாடலுக்கு நடுவே,

'பெரியவர் அழைத்தார்' என்றோம்.

'என்ன?'

'அவருக்கு ஒரு பெரிய ஆசை'

'என்ன?'

சற்றுத் தயங்கினேன். துணிச்சலை வரவழைத்துக்கொண்டு..

அவரும் கழகப் பணி செய்ய விரும்புகிறார். அதற்கு அங்கீகாரமாக பொதுக்குழு உறுப்பினர் பதவி மீது அவருக்கு ஆர்வம்' என்றேன்.

அவரது பொன்மேனியில் நூறு மைல் வேக ரத்த ஓட்டம். முகம் சிவந்தது.

இல்லை. அதாவது வந்து' என்று இழுத்தேன். அதற்கு மேல் நா அசையவில்லை. சத்தியாக்கிரகம் செய்தது.

'சும்மா இருக்கமாட்டீர்களா?' -கோபத்தோடு கேட்டார்.

நமக்கு சப்தநாடியும் தந்தி அடித்து அடங்கிவிட்டது.

எம்.ஜி.ஆருக்கு இயற்கை அளித்தது கொடுத்துச் சிவந்த கரங்கள். உண்மை.

ஆனால் உடன்பிறந்த அண்ணனை கழகப் பொதுக்குழுவில் ஒரு உறுப்பினராகக் கூட நியமிக்க மறுத்துவிட்டார்.

அண்ணனுக்குக் கனவில் பூத்த மலரும் கருகிப் போய்விட்டது.

துரைக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கிறேன். கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.' என்றார் எம்.ஜி.ஆர்.

நான் விடைபெறும்போது எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னார்.

துரை அ.தி.மு.கவின் தலைமைக் கழக நிர்வாகி. எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய விசுவாசி.

துரையும் நாமும் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு பிரிவில் பணி செய்து கொண்டிருந்தோம்.

அடுத்த நாள் என்னை துரையே அழைத்தார்.

தலைவர் தங்களிடம் தனியாக ஒரு தகவல் சொல்லச் சொன்னார்' என்றார்.
ஏறிட்டுப் பார்த்தோம்.

இனிமேல் பெரியவரை யாரும் பொதுக்கூட்டத்திற்கு அழைத்தால் அவருக்கு உடல்நிலை சரியில்லை' என்று தலைவர் சொல்லச் சொன்னார்.

இது தங்களுக்கு மட்டும் தெரிந்த தகவலாக இருக்க வேண்டும் என்றும் தலைவர் சொல்லச் சொன்னார்' என்றார் துரை.

அடுத்த சில தினங்களில் எம்.ஜி.ஆர். அழைத்தார். நீண்ட கலந்துரையாடல். விடை பெறும்போது அவர் சொன்னார்.

'சோலை… நான் அரசியலில் இருக்கும்போது அவரும் இருக்க வேண்டுமா? உலகம் என்ன சொல்லும்? அண்ணனும் தம்பியும் சேர்ந்து கூத்தடிக்கிறார்கள் என்று சொல்லமாட்டார்களா?' என்றார்.

மெய்சிலிர்த்துப் போனோம். அவர் அரசியலில் அடியெடுத்து வைத்த பின்னர் மிகுந்த எச்சரிக்கையாக இருந்தார்.

அரசியல் சதுரங்கத்தில் நாம் ஒரு காய் நகர்த்தினால் எதிரி எப்படி காய் நகர்த்துவார் என்பதனை அவர் சிந்தித்தே ஒவ்வொரு முடிவையும் எடுத்தார்.

அண்ணா விரும்பியிருந்தால் தனது வளர்ப்பு மகனை அரசியலில் அறிமுகம் செய்திருக்க முடியாதா? அந்தப் பையன்கள் உழைத்து முன்னேறுவது வேறு. திணிப்பது வேறு' என்று விளக்கம் தந்தார்.

அவரது துணைவியார் வி.என்.ஜானகி அரசியலிலிருந்து வெகுதூரம் விலகியே இருந்தார். நிர்வாகத்தில் தலையிட்டார், பரிந்துரை செய்தார் என்ற குற்றச் சாட்டே எழுந்ததில்லை.

அதே சமயத்தில் மதிக்கத் தெரிந்த இன்னொரு எம்.ஜி.ஆரையும் பார்த்தோம். அவர் முதல்வராகப் பதவியேற்றார். அண்ணாவிற்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து அண்ணன் சக்கரபாணியிடம் ஆசிர்வாதம் வாங்க அனைத்து அமைச்சர்களுடன் வந்தார்!"

-எழுத்தாளர் சோலை

வாழ்க! பொன்மனச்செம்மல்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் புகழ்.
 

Leave a comment

Comment