• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜன நாயகன் - விஜய்-க்கு சம்பள பாக்கி? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

சினிமா

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகிறது. இதற்கிடையே, இப்படத்திற்கான ப்ரேமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

பல நாட்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு 'ஜன நாயகன்' பட குழுவினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அதாவது, சம்பள நிலுவை காரணமாக விஜயின் டப்பிங் பணி தாமதமானதாக தகவல்கள் பரவி வந்தன. இதனை மறுத்துள்ள படக்குழு, இந்த தகவல்கள் ஆதாரமற்றவை. விஜய் படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகவும், அவருக்கு வழங்கப்படுவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்தும் வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என்பதால் இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக தமிழ்நாட்டு திரையரங்கு உரிமைகள் ரூ.105 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அடுத்த மாதம் 27-ந்தேதி மலேசியாவில் பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாவிற்கும் படக்குழுவினர் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply