ஆஸ்கர் போட்டியில் அறிமுக இயக்குநரின் படம்.. மகாவதார் நரசிம்மா
சினிமா
2026 மார்ச் 15 இல் நடைபெற உள்ள 98வது ஆஸ்கர் அகாடமி விருதுகளுக்கான போட்டியில் சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில் தகுதி பெற்ற படங்களில் 'மகாவதார் நரசிம்மா' இடம்பிடித்துள்ளது.
டிஸ்னியின் 'ஜூடோபியா 2', 'கே-பாப் டிமான் ஹண்டர்ஸ்', ஜப்பானின் 'டிமான் ஸ்லேயர்' மற்றும் 'ஸ்கார்லெட்' உள்ளிட்ட அனிமேஷன் படங்களுடன் 'மகாவதார் நரசிம்மா' போட்டியிடுகிறது.
இந்தியில் அறிமுக இயக்குனர் அஷ்வின் குமார் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான 'மகாவதார் நரசிம்மா' படம் யாரும் எதிர்பாராத வகையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் படம் வெளியிடப்பட்டது.
ஹாலிவுட் அதிரடி படங்கள் மற்றும் ஜப்பானிய அனிமே தொடர்கள் சிறு வயதிலிருந்தே தன் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக அஷ்வின் குமார் தெரிவித்திருந்தார்.
முன்னதாக தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு அவர் அளித்த பேட்டியில், "டெர்மினேட்டர், ஜுராசிக் பார்க், அவதார் போன்ற ஹாலிவுட் படங்களும், மகாபாரதம் போன்ற நமது காவியங்களும் என்னை மிகவும் கவர்ந்தன.
அந்த உத்வேகத்துடன், சர்வதேச அளவில் ஒரு இந்தியக் கதையைச் சொல்ல விரும்பினேன். நான் அனிமேஷின் பெரிய ரசிகன். இந்தப் படம் எனது குழந்தைப் பருவ நினைவுகள் மற்றும் நான் பார்த்த படங்களின் பாதிப்பில் உருவானது" என்றார். இந்த படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.





















