Gold Card விசாவை அறிமுகம் செய்யும் ட்ரம்ப் - கட்டணம், தகுதி உட்பட முழுமையான தகவல்
அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் Gold Card விசாவை அறிமுகம் செய்யும் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 மில்லியன் டொலர்
குறித்த திட்டமானது மிகப்பெரிய நிதி பங்களிப்புகளைச் செய்யத் தயாராக இருக்கும் பணக்கார வெளிநாட்டினருக்கு அமெரிக்க வதிவிடத்தை வழங்கும்.
அமெரிக்காவின் USCIS அதிகாரிகள் விண்ணப்பம் பெறத் தொடங்குவதற்கு முன்பு தற்போது, மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகத்தில் (OMB) படிவம் I-140G இன் வரைவை தாக்கல் செய்துள்ளனர்.
டிசம்பர் 18 ஆம் திகதி விசாவை அறிமுகம் செய்யும் வகையில் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு பெரும் ஆதாயமளிப்பவர்களுக்கு Gold Card விசா அனுமதிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் நபர்கள் திரும்பக் கிடைக்காத ஒரு தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். உரிய நேரத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும், அத்துடன் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் 1 மில்லியன் டொலர் அன்பளிப்பாக செலுத்தவும் தயாராக வேண்டும்.
இந்த அன்பளிப்பு விண்ணப்பதாரரால் நாட்டிற்கு நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்கும் என நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்டால், அந்த நபர் EB-1 அல்லது EB-2 வகைகளின் கீழ் சட்டப்பூர்வமான நிரந்தர குடியிருப்பாளராக மாறுவார்.
இருப்பினும், தேசிய பாதுகாப்பு அல்லது வேறு அச்சுறுத்தல் காரணமாக ஒருவரின் Gold Card விசா ரத்து செய்யப்படலாம். தனி நபருக்கு 1 மில்லியன் டொலர் என்றால், தனியார் நிறுவனம் ஒன்று தமது ஊழியர் ஒருவருக்காக விண்ணப்பிக்கும் எனில் 2 மில்லியன் டொலர் செலுத்த வேண்டும்.
திரும்பப்பெற முடியாத செயலாக்கக் கட்டணமாக 15,000 டொலர் செலுத்த வேண்டும். வணிகத் துறையிடம் தங்க அட்டை கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். USCIS இடம் படிவம் I-140G ஐ தாக்கல் செய்ய வேண்டும்.
அத்துடன் சட்டப்பூர்வமாக சம்பாதித்த தொகை என்பதையும் உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பதாரரின் குற்றவியல் பிண்ணணி ஆராயப்படும், பண முறைகேடுகள் விசாரிக்கப்படும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா என்பதையும் கருத்தில் கொள்ளப்படும்,
வரி செலுத்திய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும், வங்கி மற்றும் கிரிப்டோகரன்சி தொடர்பிலான தரவுகளும் சமர்ப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்டால், விண்ணப்பதாரர்கள் தங்கள் நிரந்தர வதிவிட அந்தஸ்தைப் பெற வெளிநாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குச் செல்ல வேண்டும்.
ஏற்கனவே அமெரிக்காவிற்குள் இருப்பவர்கள் தங்கள் அந்தஸ்தை சரிசெய்ய அனுமதிக்கப்படலாம், ஆனால் அவர்களுக்கான விதிகள் இன்னும் இறுதி செய்யப்பட்டு வருகின்றன.























