திப்பு சுல்தான் வாரிசுக்கு உயரிய கெளரவம் அளித்த பிரான்ஸ் அரசு
திப்பு சுல்தானின் வழித்தோன்றலும், இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்களுக்கு எதிரான ரகசிய உளவாளியாக இருந்த நூர் இனாயத் கான்-ஐ பிரான்ஸ் அரசு கௌரவித்துள்ளது.
பிரான்ஸ் அரசு தபால் சேவையான லா போஸ்ட், நூர் உருவம் கொண்ட சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த கௌரவத்தைப் பெற்ற ஒரே இந்திய வம்சாவளி பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், நாஜி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்காற்றிய 12 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை நினைவுகூரும் வகையில் தொடர்ச்சியான தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தற்போது நூர் இடம்பெற்றுள்ளார்.
நூர், பிரான்சில் பிரிட்டிஷ் ராணுவ சிறப்பு நடவடிக்கை பிரிவின் ரகசிய உளவாளியாக பணியாற்றினார். ரகசிய தகவல் தொடர்பு வலையமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் அவர் நாஜிகளால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
நூரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய 'ஸ்பை பிரின்சஸ்: தி லைஃப் ஆஃப் நூர் இனாயத் கானின்' ஆசிரியர் ஷ்ரபானி பாசு பேசுகையில், பிரான்ஸ் அரசாங்கம் நூர் இனாயத் கானின் தபால் தலையை வெளியிட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடி தனது உயிரைத் தியாகம் செய்த ஒரு பெண்ணின் முகம் பிரான்சில் சாதாரண மக்கள் பயன்படுத்தும் தபால் தலையில் தோன்றுவது அற்புதம்" என்று கூறினார்.






















