சமையல்காரன் டூ வில்லாதி வில்லனாக மாறிய நம்பியார்..
சினிமா
நம்பியார் என்கிற பெயரை கேட்டதும், நம் அனைவரின் நினைவிற்கு வரும் படம் ஆயிரத்தில் ஒருவன். அந்த படத்தில் கைகளை உரசியபடி 'சினம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா' என கர்ஜித்து பேசி இருப்பார். அந்த படத்தில் எம்.ஜி.ஆர் ஹீரோவாக இருந்தாலும், அவருக்கு நிகராக வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார் எம்.என்.நம்பியார்.
சமையல் காரனாக நாடக கம்பெனியில் நுழைந்த நம்பியார், பின் நாளில் வில்லாதி வில்லனான மாறினார். கருப்பு வெள்ளை காலத்திலிருந்து இந்த காலம் வரை, தமிழ் சினிமாவில் எத்தனையோ வில்லன் நடிகர்கள் வந்தாலும் எம்.என்.நம்பியார், தனித்தன்மை வாய்ந்தவராக பார்க்கப்படுகிறார். இவரின் நடிப்பு திறமையை பார்த்து வியந்து போன எம்.ஜி.ஆர் தனக்கு நிகராக நம்பியாரை வில்லனாக்கி அழகு பார்த்தார்.
ஒரு படத்தின் வெற்றிக்கு ஹீரோ எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு வில்லன் கதாபாத்திரமும் மிகவும் முக்கியம். பல படத்தில் பயங்கரமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி, போகிற இடமெல்லாம், இவன் எல்லாம் ஒரு மனுஷனா என மக்கள் இவரை திட்டி தீர்த்தார்கள். ரசிகர்கள் திட்டுவது தான், தனது நடிப்புக்கு கிடைத்த வெற்றி என்று மேலும் தனது நடிப்பில் மெருகேற்றி நடித்தார். கைகளை அரக்கிக்கொண்டு, முக பாவனையில் கூட வில்லத்தனத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தத் தெரிந்த மகா கலைஞர் எம்.என்.நம்பியார்.
சிறு வயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், அடுத்த வேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தார். அப்போது தான், ஊட்டியில் தனது சகோதரியின் கணவரின் தயவால், சகோதரியின் கணவர் சொந்தமாக வைத்து இருந்த டீக்கடையில் வேலை செய்தார் நம்பியார். ஒரு கட்டத்தில் அந்த தொழிலும் நொடிந்து போனதால், இனி இவர்களுக்கு, நாம் பாரமாக இருக்கக்கூடாது என முடிவு செய்து நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என்பவரின் நாடகக்குழுவில் சேர்ந்தார். நடிகராக சேரவில்லை, அங்குள்ள நடிகர்களுக்கு சமைத்து போடும் சமையல் காரரின் உதவியாளராக சேர்ந்தார். மூன்று வேலையும் வயிற்றுக்கு சம்பாடு கிடைத்ததே தவிர சம்பளம் என எதுவும் கிடைக்கவில்லை.
அந்த நாடக கம்பேனியில் நடிப்பவர்களுக்கு மட்டுமே சம்பளம் கொடுத்தார்கள். அங்கு நாடக நடிகர்களின் நடிப்பை பார்த்து பார்த்து இவருக்கும் நாடகத்தின் மீது ஆர்வம் வந்தது. அதன் பின் மெல்ல மெல்ல அவருக்கு அந்த நாடக குழுவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ராமதாஸ் என்று ஒரு நாடகத்தை அந்த நாடகக் குழு அரங்கேற்றியது அந்த நாடகத்தை படமாக்க வேண்டும் என்று ஒரு தயாரிப்பாளர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் பேசினார்.
அப்போது, நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை தாராளமாக படமாக்குங்கள். ஆனால். இந்த நாடகத்தில் நடித்த நடிகர்களை தான் அந்தப் படத்திலும் நடிக்க வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த நாடகத்தில் நம்பியாரும் நடித்திருந்ததால் அவருக்கும் அப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் நடிகர் நம்பியார் பக்த ராமதாஸ் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்குள் அடி எடுத்து வைத்தார்.
இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மிரட்டல் வில்லனாக மாறினார். எம்.ஜி.ஆரும், நம்பியாரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள் என்பதால், திரைக்கு முன் இருவரும் சண்டை போட்டுக்கொண்டாலும், நிஜவாழ்க்கையில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.
எம்.ஜி.ஆர் நடித்த முதல் படமான ராஜகுமாரி படத்திலும், கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்திலும் நம்பியார் நடித்து இருந்தார். எம்.ஜி.ஆர் தனது படத்தில் கதாநாயகிகளை கூட மாற்றி இருக்கிறார். ஆனால், வில்லனை மாற்றிக்கொள்ளவே இல்லை.
இதுவே இவர்களின் ஆழமான நட்புக்கு எடுத்துக்காட்டு. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்த படம், எங்கள் வீட்டுப்பிள்ளை, அந்த படத்தில் வரும் நான் ஆணையிட்டால் பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து அவரின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. எம்.ஜி.ஆர் திரைத்துறையிலும், அரசியலிலும் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணமே நம்பியார், தீமையின் உச்சமாக காட்டப்பட்டது தான். எம்.ஜி.ஆரை ராமச்சந்திரன் என்று பெயர் சொல்லி உரிமையோடு அழைத்த ஒரே நடிகர் நம்பியார் மட்டுமே, இருவரும் எப்போதும், கலகலப்பாக பேசிக்கொள்ளக்கூடியவர்கள்.
எம்.ஜி.ஆர் முதலமைச்சராக ஆன பின், நம்பியாரிடம் உனக்கு என்ன பதவி வேண்டும் என்று கேட்க, நான் படத்தில் உங்களுக்கு எதிராக வில்லனாகத்தான் நடித்து இருக்கிறேன். இதனால், எனக்கு எதிர் கட்சி இருக்கை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கிண்டலாக பேசி இருக்கிறார் நம்பியார். எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பின், நம்பியார் குணசித்திர நடிகராக மாறினார். அவரை நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் பாக்யராஜ், அவர் நடித்த தூறல் நின்னு போச்சு படத்தில் நல்ல ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த நேரத்தில் தான், வார இதழ் ஒன்றுக்கு நம்பியார் பேட்டி அளித்து இருந்தார். அதில், எம்.ஜி.ஆர் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறியிருக்கிறார்.
இந்த தலைப்பை போட்டு அந்த புத்தகமும் வெளியானது. அப்படி என்ன எம்.ஜி.ஆர் நம்பியாருக்கு துரோகம் செய்துவிட்டார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பலரும் அந்த புத்தகத்தை வாங்கி படித்துள்ளனர். அதில், ராஜகுமாரி படத்தில் இருந்து நானும் எம்.ஜி.ஆரும் சேர்ந்து நடிக்கிறோம். அவர் இளைஞராக நடித்தார், நானும் பல படங்களில் அவருக்கு வில்லனாக நடித்தேன். ஆனால், தற்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சராக ஆகிவிட்டதால் தற்போது என்னை பலரும் தாத்தா கதாபாத்திரத்திற்கும், பெரியப்பா கதாபாத்திரத்திற்கும், அப்பா கதாபாத்திரத்திற்கும் நடிக்க அழைக்கிறார்கள். இது தான் எம்.ஜி.ஆர் எனக்கு செய்த துரோகம் என்று கூறி இருக்கிறார். சினிமாவில் கொடுமைக்காரனாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த ஒழுக்கங்களை கடைபிடித்து வந்தார்.
திரையுலகில் சிறந்த ஆன்மீகவாதியாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் விளங்கிய நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரி மலைக்குச் சென்றுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ள நம்பியார் 2008 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், அவர் விட்டு சென்ற இடம் இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது.
தமிழச்சி கயல்விழி























