3 நாட்கள் ஓடவே திணறும் புது படங்களுக்கு மத்தியில் ரீ ரிலீஸில் 1 வாரம் கடந்த ஆட்டோகிராப் - சேரன் நெகிழ்ச்சி
சினிமா
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில், சேரனின் தயாரிப்பில், இயக்கத்தில், நடிப்பில் வெளியான 'ஆட்டோகிராப்' படம் கடந்த 14-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியானது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் தமிழகம் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
படத்தில் பள்ளி பருவம், கல்லூரி பருவம், இளமை பருவங்களில் கதாநாயகன் சந்தித்த காதல் அனுபவங்களை அழகாக சொல்லியிருப்பார் இயக்குநர் சேரன். மேலும் இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் இன்றளவும் ரசிர்களால் ரசிக்கப்படுவதும், பலருக்கும் மோட்டிவேசன் பாடலாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பாடலை பாடிய சித்ரா, பாடலை எழுதிய பா.விஜய் இருவரும் தேசிய விருது பெற்றனர்.
இந்த நிலையில், 'ஆட்டோகிராப்' படம் வெளியாகி 7நாட்கள் ஆன நிலையில் படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கு சேரன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சேரன் வெளியிட்டுள்ள செய்தியில், 21 வருடங்களுக்கு பின் வெளியானபோதும் கொண்டாடி படம் பார்த்து பாராட்டிய அனைத்து மக்களுக்கும் நன்றி...
சில புதிய படங்கள் மூன்று நாட்கள் திரையரங்கில் தொடர்வது கடினமாக இருக்கும் காலத்தில் மறு வெளியீட்டில் தொடர்ந்து ஒரு வாரம் ஓடியிருப்பது மகிழ்ச்சி... அதற்கு ஒத்துழைத்த அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்.






















