வங்கதேசத்தில் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.38 மணிக்கு அந்நாட்டின் தலைநகர் டாக்காவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. டாக்காவில் 4 பேரும், நர்சிங்டி பகுதியில் 5 பேரும், நாராயண்கஞ்ச் பகுதியில் ஒருவரும் பலியாகினர். மேலும் 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.






















