• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்த டியூனுக்கு வார்த்தை வரலையா? நீ எல்லாம் என்ன கவிஞர்? கண்ணதாசனை தனி அறையில் திட்டிய எம்.எஸ்.வி

மெட்டுக்கு வார்த்தை வரவில்லை என்று கண்ணதாசனை எம்.எஸ்.வி திட்டிய நிலையில் ஒரு மெகா ஹிட் பாடல் பிறந்துள்ளது.

கவிஞர் கண்ணதாசன் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர். இவர் பல கருத்துகளை தன் பாடல் மூலமாக நாசுக்காக வெளிப்படுத்தியுள்ளார். இவருக்கும் எம்.எஸ்.வி-க்கும் இருக்கும் உறவை பலரும் பாராட்டியுள்ளனர். இருவரும் இசையும், பாடலும் போன்றவர்கள் என்றும் புகழ்ந்துள்ளனர். இப்படி இருவரும் இணைந்து பல கிளாசிக் பாடல்களை கொடுத்துள்ளனர். அதில் ஒன்றுதான் ‘பட்டின பிரவேசம்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘வான் நிலா.. நிலா அல்ல’ பாடல்.

1977-ம் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பட்டின பிரவேசம்’. இந்த படத்திற்கு விசு கதை எழுதியிருந்தார். டெல்லிகணேஷ், ஜெய்கணேஷ், சிவசந்திரன், காத்தாடி ராமமூர்த்தி, மீரா, சரத்பாபு என பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர். கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வரும் குடும்பத்தின் கதைதான் இது. நகரத்து கலாச்சாரத்தை, ‘பாரப்பா பழநியப்பா’ என்று எம்ஜிஆர் பாடினார். ‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ என்று நாகேஷை வைத்து ‘அனுபவி ராஜா அனுபவி’யில் பாடவைத்தார் பாலசந்தர். இப்போது படமாகவே எடுத்திருந்தார்.

இந்தப் படம்தான் டெல்லிகணேஷ் அறிமுகமான முதல் படம். தமிழ் சினிமாவில் நண்பன் என்றாலே, அதிலும் ரஜினிக்கு நண்பன் என்றாலே ‘சரத்பாபுவை கூப்பிடு’ என்பார்கள். அந்த சரத்பாபு அறிமுகமான திரைப்படமும் இதுதான். படம், மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால், எம்.எஸ்.வி.யின் இசையில், கண்ணதாசனின் வரிகளில் பாடல்கள் எல்லாம் ஹிட்டானது. எழுபதுகளின் காதலர்களுக்கான இனிய பாடல். காதலர்களுக்கு மட்டுமின்றி எல்லோருக்குமான பாடல். பாடலை ரசிப்பவர்களுக்கும் வார்த்தைகளில் கரைந்து போகிறவர்களுக்குமான பாடல். அது தான் ‘வான் நிலா.. நிலா’ பாடல்

எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட மெட்டில் கண்ணதாசன் வரிகளில் எஸ்.பி.பி குரலில் வெளியான இந்த பாடல் தேன் போல் காதுகளுக்கு அன்றும் இன்றும் என்றும் திக்திக்கும் பாடலாக உள்ளது. இப்படம் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் எம்.எஸ்.வி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ”நானும் கவிஞர் கண்ணதாசனும் ஒரு அறைக்கு சென்றோம். அப்போது கண்ணதாசனிடம் நீ ஒரு சந்தத்தை கொடுத்திருக்கிறாய். அதற்கு நான் எத்தை சாயம் நான் போட்டிருக்கிறேன்.

நான் ஒரு சந்தம் கொடுத்தால் அதற்கு வார்த்தை வரவில்லை என்கிறாய், என்ன அர்த்தம் இது?? நீ எல்லாம் ஒரு கவிஞனா என்றேன். அதற்கு கண்ணதாசன் உட்காரு. மெட்டு போடு என்று சொல்லி ‘வான் நிலா நிலா அல்ல’ என்று வார்த்தை சொன்னார். இப்படி தான் அந்த பாடல் பிறந்தது. ‘தொட்டிலா, கட்டிலா, வெண்ணிலா’ என்று எல்லாமே ‘லா’விலேயே முடிந்தது. 10 நிமிடத்தில் மொத்த பாடலும் முடிந்துவிட்டது.” என்றார்.

தமிழச்சி கயல்விழி

Leave a Reply