• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கூட்டு எதிர்க்கட்சியின் நுகேகொடை பேரணியில் ஒலி பெருக்கி பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு

இலங்கை

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று (21) பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுப் பேரணியில் ஒலி பெருக்கி அமைப்புகளைப் பயன்படுத்துவது தொடர்பாக இலங்கை பொலிஸார் சிறப்பு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

பொலிஸ் அறிக்கையின்படி, பேரணி ஏற்பாட்டாளர்கள் நிகழ்விற்கு ஒலி பெருக்கி கருவிகளைப் பயன்படுத்த மிரிஹான பொலிஸாரிடம் அனுமதி கோரியிருந்தனர். 

எனினும், பல க.பொ.த உயர்தரப் பரீட்சை மையங்கள் பேரணி நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளதாகவும், அதிக ஒலி எழுப்பும் ஒலி அமைப்புகளைப் பயன்படுத்துவது நடந்துகொண்டிருக்கும் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இன்று காலை 8.30 மணி முதல் 11.40 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படுவதாகவும், பரீட்சை செயல்முறையில் குறுக்கிடக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் பரீட்சார்த்திகளை எதிர்மறையாகப் பாதிக்கும் என்றும் பொலிஸார் அந்த ற அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

இதன் விளைவாக, ஒலி உபகரணங்களைப் பயன்படுத்துவதை நிர்வகிக்கும் தற்போதைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், பரீட்சை நிலையங்களுக்குள் நுழையும், அமர்ந்திருக்கும் அல்லது வெளியேறும் மாணவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும் பொலிஸார் பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அதேநரேம், பேரணி நடைபெறும் இடங்களுக்குள் மட்டுமே ஒலி அமைப்புகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய பொலிஸார், அனைத்து உரிம நிபந்தனைகளும் அவசியம் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், உயர்தரப் பரீட்சைகள் தடையின்றி நடத்தப்படுவதை உறுதி செய்வதுமே இந்த நடவடிக்கைகளின் முதன்மை நோக்கம் என்றும் இலங்கை பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவ‍ேளை, நுகேகொடையில் நடைபெறும் கூட்டு எதிர்க்கட்சி பேரணிக்காக தயார் செய்யப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள், தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை காரணம் காட்டி அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 

Leave a Reply