வலுப்பெற்ற தொழில் – திருப்திகரமான தனியார் சேவை – அமைச்சரவை ஒப்புதல்
இலங்கை
1954 ஆம் ஆண்டின் 19ம் இலக்க “கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய ஒழுங்குமுறை) சட்டமானது” கடைகள் மற்றும் அலுவலகப் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் நலன்களை உறுதி செய்வதற்கான விதிகளை நிர்ணயிக்கிறது. இதில் பணிநேரங்கள், மேலதிக நேரத்திற்கான ஊதியம், ஊதியம் வழங்கும் இடைவெளிகள், மேலும் பெண் ஊழியர்களுக்கான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மகப்பேற்று நலன்கள் போன்றவற்றிற்கான ஒழுங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
2023 ஒக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், தகவல் தொழில்நுட்ப (IT) மற்றும் தொழில் செயன்முறை அவுட்சோர்சிங் (BPO) துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு இரவு நேரங்களில் பணியாற்ற அனுமதி வழங்கின. எனினும், இந்த திருத்தங்கள் ஹோட்டல் துறையில் உள்ள பணியாளர்களை உள்ளடக்கவில்லை.
இதற்கமைய, சமீபத்திய அமைச்சரவை கூட்டத்தில், வசிப்பிட ஹொட்டல்கள் மற்றும் உணவகங்களில் பணிபுரியும், 18 வயதுக்கு மேற்பட்ட மகளிர் உணவு மற்றும் பான வழங்குநர்கள் இரவு 6.00 மணிக்குப் பிறகும் காலை 6.00 மணிக்கு முன்பும் பணியாற்றுவதனை அனுமதிப்பதற்கு, 1954 ஆம் ஆண்டின் 19ம் இலக்க “கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய ஒழுங்குமுறை)சட்டத்தின்” 03 ஆம் இலக்க கட்டளையினைத் திருத்தும் முன்மொழிவை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.























