ஆணியே புடுங்க வேண்டாம்- நாளை முதல் திரையரங்குகளில் கொண்டாடலாம் ப்ரண்ட்ஸ்
சினிமா
விஜய், சூர்யா நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான படம் 'ப்ரண்ட்ஸ்'. மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் வடிவேலு, தேவயானி, விஜயலட்சுமி, ராதாரவி, மதன்பாப், ரமேஷ் கண்ணா, சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.
நட்பை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும், காமெடி காட்சிகளும் படம் திரைக்கு வந்து 24 ஆண்டுகளை கடந்தும் கொண்டாடப்பட்டு வருகின்றன. நீ ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம் என்பது உள்பட படத்தில் இடம்பெற்ற அனைத்து காமெடி காட்சிகளும் இன்றும் ரசித்து சிரிக்க வைக்கின்றன.
இந்நிலையில் 'ப்ரண்ட்ஸ்' படம் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாளை முதல் 4 கே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு 'ப்ரண்ட்ஸ்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். அதில் பேசிய நடிகர்கள் பழைய நினைவுகளை கூறி விழாவை கலகலப்பாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.























