மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்
இலங்கை
மரங்கள், மண்மேடுகள் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் பாதிக்கப்பட்ட மலையகம் மார்க்கமூடான ரயில் சேவைகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (20) கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்ட ரயில்கள் நானுஓயாவிற்கும், பதுளையிலிருந்து கொழும்புக்கு இயக்க திட்டமிடப்பட்ட ரயில்கள் நானுஓயாவிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் இயக்கப்படும்.
மலையகப் பாதையில் ரயில் தடம் புரண்ட இடம் ஆபத்தான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மலையகப் பாதையின் ரயில் பராமரிப்பு பணிகள் இன்றிரவு (20)க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதல்கஸ்ஹின்ன மற்றும் ஓஹிய ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப்பாதை அருகில் நேற்று முன்தினம் (18) இரவு கற்பாறைகள் சரிந்ததால் கொழும்பிலிருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டது.
கனமழையால் ஏற்பட்ட மண்சரிவினால் பல பெரிய பாறைகள் ரயில் என்ஜின் மீது விழுந்து பாதிப்பு ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான ரயிலின் பயணிகள் பெட்டிகள் பாதுகாப்பாக ஹப்புத்தளைக்கு மாற்றப்பட்டன.
சம்பவ இடத்திலிருந்து பாறைகளை அகற்றவும், தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தவும், நானுஓயா ரயில் நிலைய மீட்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உடனடியாக அனுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.























