உக்ரைன் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ரஷியா சரமாரி தாக்குதல் - 10 பேர் பலி
உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள டெர்னோபில் மீது ரஷியா நேற்றிரவு டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 12 குழந்தைகள் உள்பட 37 பேர் காயம் அடைந்துள்ளனர். டெர்னோபில்லி உள்ள இரண்டு 9 மாடி அடுக்குமாடி குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
38 வகையான பல்வேறு ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் 476 தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
சாதாரண வாழ்க்கைக்கு எதிரான ஒவ்வொரு வெட்கக்கேடான தாக்குதலும், போரை நிறுத்த ரஷியா மீதான அழுத்தம் போதுமானதாக இல்லை என்பதைக் குறிக்கிறது என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்த துருக்கி சென்றுள்ளார். துருக்கி அதிபரை சந்தித்து ரஷியாவுக்கு ராஜாங்கரீதியாலான அழுத்தம் கொடுக்க வலியுறுத்துவேன் என ஜெலன்ஸ்தி தெரிவித்துள்ளார்.
முதலில் அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள துருக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர் துருக்கி வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.























