எம்ஜிஆர் போல் எவருண்டு?
சினிமா
எம்.ஜி.ஆர், முதல்வராக இருந்த போது ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஐசரி வேலன். அவருக்கு பயணம் செய்ய வசதியாக ஒரு கார் வேண்டுமென்று தொகுதியை சேர்ந்த சிலர் முடிவெடுத்து எம்ஜிஆரை சந்தித்தனர். அவர்கள் சொன்னதையெல்லாம் அமைதியாக கேட்ட எம்ஜிஆர், ``நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று கூறி அனுப்பி விட்டார். ஐசரி வேலனை ஆர்.எம்.வீரப்பனுக்கு கீழ் துணை மந்திரியாக்கி, ஒரு மந்திரிக்குரிய காரை, மற்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தவர் அன்றைய முதல்வர் எம்ஜிஆர். இதன் பின்னணியில் எந்தவித தவறும் நடந்து விடக்கூடாதென்ற முன் யோசனையில், சர்ச்சை ஏற்படுத்த திமுக முயலக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வில் இருந்தவர் அன்றைய முதல்வர் எம்ஜிஆர். அரசியலும், அவருக்குப் பின் வந்த ஆட்சிகளும் அப்படி இருந்ததா, இன்று இருக்கிறதா என்பதே நாம் கேள்வி.
எம்.ஜி.ஆர், நடிகராக இருந்தபோதும் சரி, தமிழக முதல்வராக இருந்த போதும் சரி, பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் தான், பெரிய மைதானங்களில் தான் அவரது கூட்டங்கள் நடைபெறும். எத்தனை லட்சம் பேர் கூடினாலும் எம்ஜிஆரின் கண் வீச்சுக்கும், சொல் வீச்சுக்கும் கட்டுப்பட்டவர்களாக அவரது ரசிகர்கள், தொண்டர்கள் இருந்தனர். தேர்தல் பிரச்சாரத்திற்காக பல்வேறு ஊர்கள், கிராமங்களுக்கு எம்ஜிஆர் சென்றால் அந்தந்த ஊர் மக்களே அவற்றில் பங்கேற்பர். அவரது கட்சி நிர்வாகிகளும், அதில் கட்டுப்பாடாக இருந்து மக்களை வழி நடத்துவர். ராணுவ கட்டுப்பாடு என்பார்களே, அப்படி இருக்கும் எம்ஜிஆரது அரசியல், ஆட்சி அணுகுமுறைகள். அவருடன் இருக்கும் பாதுகாவலர்களும் தலைவர் எம்ஜிஆரைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து சிறு அசம்பாவிதம் கூட நடக்காமல் பார்த்துக் கொள்வர். தன்னால் மற்றவர்களுக்கோ, மற்றவர்களால் தனக்கோ எவ்வித தீங்கும் நடக்காமல் பார்த்துக் கொள்ளும் பாதுகாப்பு உணர்வு எம்ஜிஆரிடம் எப்போதும் இருந்தது.
இதயக்கனி நவம்பர் 2025 தலையங்கத்திலிருந்து....
இதயக்கனி எஸ்.விஜயன்























