இந்துஜா குழும தலைவர் கோபிசந்த் இந்துஜா மறைவு
இந்துஜா குழுமத்தின் தலைவரான கோபிசந்த் பி. இந்துஜா நேற்று லண்டனில் காலமானார். அவருக்கு வயது 85.
இவர் 2023-ஆம் ஆண்டுதான் இந்துஜா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். நான்கு இந்துஜா சகோதரர்களில் இவர் இரண்டாமவர் ஆவார். மூத்த சகோதரரான ஸ்ரீசந்த் இந்துஜா 2023-ல் காலமானார்.
இவர்களது தந்தை பரமானந்த் இந்துஜா இந்தியவின் மும்பை மற்றும் ஈரானின் தெஹ்ரான் இடையே வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் இரும்புத் தாது ஆகியவற்றை ஏற்றுமதி செய்து விற்றதன் மூலம் வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.
தற்போது டாடா, பிர்லா, அம்பானி ஆகியோரின் குழுமங்களுடன் இந்துஜா குழுமமும் இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றாக உள்ளது.
இந்துஜா சகோதரர்கள்
தற்போது ஆட்டோமொபைல், பேங்கிங், தொழில்நுட்பம்., ரியல் எஸ்டேட் உட்பட 11 துறைகளில் இக்குழுமம் வர்த்தகம் செய்கிறது.
அசோக் லேலண்ட், இண்டஸ்இண்ட் வங்க, என்.எக்ஸ்.டி டிஜிட்டல் லிமிடெட் போன்றவை இக்குழுமத்தின் முக்கிய நிறுவனங்கள் ஆகும்.
கோபிசந்த் இந்துஜா 1997-ல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றார். சண்டே டைம்ஸின் 2025 பணக்காரர்கள் பட்டியலில், கோபிசந்த் இந்துஜாவின் குடும்பம் 32.3 பில்லியன் பவுண்டுகளுடன் பிரிட்டனின் பணக்காரக் குடும்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கோபிசந்த் இந்துஜாவுக்கு சுனிதா இந்துஜா என்ற மனைவியும் சஞ்சய் இந்துஜா, தீரஜ் இந்துஜா, ரீட்டா இந்துஜா ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.























