• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செய்யாத குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய வம்சாவளி நபரின் நாடுகடத்தல் நிறுத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார்.

எந்த சாட்சியமும் இல்லாத நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு அவர் குற்றவாளி என கடந்த காலங்களில் 2 முறை தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் 43 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் குற்றவாளி அல்ல என புதிதாக சமர்ப்பிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த மாதம் விடுவிக்கப்பட இருந்த நிலையில், 20 வயதில் சுப்பிரமணியத்திற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் விநியோகக் குற்றச்சாட்டை காரணம் காட்டி கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி குடியேற்ற அதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.

இந்தநிலையில், அமெரிக்காவில் நாடுகடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி, சுப்ரமணியத்தை நாடு கடத்துவதை தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட்டார்.

குடியேற்ற வழக்குகளுக்கான மேல்முறையீட்டு வாரியம், இந்த வழக்கை மறுபரிசீலனை செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் வரை அவர் நாடு கடத்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுப்ரமணியம் ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது அவரது பெற்றோர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அவரிடம் நிரந்தர அமெரிக்க குடியுரிமை இருந்தபோதிலும் அவரை நாடு கடத்தி டிரம்ப் நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
 

Leave a Reply