சர்ச்சைக்குரிய விளம்பரத்தை நியாயப்படுத்தும் ஒன்றாரியோ அமைச்சர்
அமெரிக்காவிற்கு எதிராக ஒளிபரப்பு செய்யப்பட்ட விளம்பரம் நியாயமானது என ஒன்டாரியோ மாகாணத்தின் பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக அமைச்சர் விக் பெடெல்லி (Vic Fedeli) தெரிவித்துள்ளார்.
டிரம்ப் விதித்த வரிகள் (tariffs) நுகர்வோர் பொருட்களின் விலைகளை கடுமையாக உயர்த்தியுள்ளதனை அமெரிக்காவில் பலர் தற்போது உணரத் தொடங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
ஒன்டாரியோ அரசு வெளியிட்ட, முன்னாள் அமெரிக்க அதிபர் ரோனால்ட் ரீகன் வரிகளுக்கு எதிராக பேசிய விளம்பரம் அமெரிக்காவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பெடெல்லி கூறுகையில், “செய்தி ஏற்கனவே சென்றுவிட்டது. நான் வெளிநாட்டில் பயணம் செய்த இடமெல்லாம், குறிப்பாக அமெரிக்க எல்லைக்கு அப்பால், மக்கள் ‘Go Doug Go’ என்று ஒன்டாரியோ முதல்வர் டக் போர்ட்டை பாராட்டுகின்றனர்,” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்கள் இப்போது கடைகளில் பொருட்கள் வாங்கும்போது, ‘ஏன் இவை இவ்வளவு விலையா?’ என்று கேட்கிறார்கள். அடுப்பு, ஃபிரிட்ஜ், ட்ரையர் போன்ற வீட்டு உபயோக பொருட்களின் விலை வானளவில் உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் டிரம்ப் விதித்த 50% உருக்கு வரி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரீகன் தானே தனது சொற்களில், வரிகள் முதலில் நன்மைதரும் போல தோன்றினாலும், இறுதியில் நாட்டையே பாதிக்கும் என்று கூறியுள்ளார். அதைக் காட்டும் அந்த விளம்பரம் மிகுந்த தாக்கம் ஏற்படுத்தியது என மேலும் தெரிவித்துள்ளார்.
அந்த விளம்பரம் 11 பில்லியன் முறை பார்க்கப்பட்டது, இதுவே டிரம்பை கோபப்படுத்தியதாக பெடெல்லி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விளம்பரத்தால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், கனடாவுடன் இருந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்தி, கூடுதலாக 10 சதவீத வரி விதிப்பதாக மிரட்டியிருந்தார்.
இதையடுத்து, கனடா பிரதமர் மார்க் கார்னி, டிரம்பிடம் மன்னிப்பு கோரி, அந்த விளம்பரங்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.























