• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஓடும் ரெயிலில் பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் - 10 பேர் படுகாயம்- இருவர் கைது

இங்கிலாந்தில் டான்காஸ் டரில் இருந்து லண்டன் கிங்ஸ் கிராஸ் பகுதிக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் கேம்பிரிட்ஜ்ஷையர் அருகே ஹண்டிங்டன் பகுதியில் வந்தபோது மர்ம நபர்கள் பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். சிலர் கழிவறைக்குள் சென்று பதுங்கி கொண்டனர்.

இதுகுறித்து பயணிகள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஹண்டிங்டன் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டு சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது ரெயிலில் இருந்து பயணிகள் பயத்துடன் அவசர அவசரமாக வெளியேறினார்கள்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 9 பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பயங்கரவாத எதிர்ப்பு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தாக்குதல் நடத்திய நபர்களில் ஒருவர் பெரிய கத்தியை வைத்து இருந்தார் என்றும் எங்கே பார்த்தாலும் ரத்தம் இருந்தது என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.

கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்து உள்ளார். "ஹண்டிங்டன் அருகே ரெயிலில் நடந்த தாக்குதல் சம்பவம் பயங்கரமானது மற்றும் ஆழ்ந்த கவலைக்குரியது. பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன.

அவசர நடவடிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் போலீசாரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்" என்றார்.

Leave a Reply