அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்க முடியாது- இந்தியாவுடன் வர்த்தக உறவு - கனடா பிரதமர் உறுதி
அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக கனடா வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையானது. இதையடுத்து கனடாவுடனான அனைத்து விதமான வர்த்தக பேச்சுவார்தையை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் கனடா பிரதமர் மார்க் கார்னி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
உலகின் பிற நாடுகளுடன் உறவை கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளோம். உலக பொருளாதாரத்தில் 60 சதவீத பங்களிப்பை வழங்கும் ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதை விட சிறந்த இடம் வேறு இல்லை.
இந்தியாவுடனான உறவில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம், இந்தியாவுடனான வர்த்தக உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்திய பிரதமர் மோடியை சந்தித்தது இல்லை. ஆனால் எங்களது வெளியுறவு துறை மந்திரி உள்ளிட்ட பிற மந்திரிகள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளுடன் சிறந்த உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.
அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்கும் தன்மையை மாற்ற வேண்டும். இது ஒரே இரவில் நடக்காது என எனக்கு தெரியும். நாங்கள் மிக விரைவில் முன்னேறி வருகிறோம் என்றார்.























