காசாவில் தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு டிரம்ப் எச்சரிக்கை
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக உயரிலுள்ள இஸ்ரேல் பணய கைதிகளையும், உயிரிழந்த கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க சம்மதிப்பதாக தெரிவித்தது.
அமைதி திட்டத்தில் உள்ள மற்ற சில அம்சங்கள் குறித்து மத்தியஸ்தர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்த விளைவதாகவும் ஹமாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தற்போது ஹமாஸ் வசம் உயிருள்ள 22 இஸ்ரேல் பணய கைதிகளும், உயிரற்ற 26 இஸ்ரேல் கைதிகளின் உடல்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான பணய கைதிகள் விடுதலைக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில் காசா மீதான தாக்குதல்களை உடனே நிறுத்துமான இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு டிரம்ப் கட்டளையிட்டார்.
இந்நிலையில், காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் ராணுவம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், பணயக்கைதிகள் விடுதலை செய்ய ஒப்புக்கொண்ட ஹமாஸ் அமைப்பு, அதை உடனடியாக செய்ய வேண்டும் என்றும், மேலும் தாமதம் ஆகுவதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக இஸ்ரேல் பாலஸ்தீன நகரமான காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் அதிகளவில் பெண்கள் குழந்தைகள் உட்பட 66 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.





















