பிரிட்டனில் யூத ஆலயம் அருகே பயங்கரவாத தாக்குதல் - இருவர் பலி
இங்கிலாந்து நாட்டின் வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத ஆலயம் அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் கொண்டாட்டதிற்காக அங்கு ஏராளமானோர் குழுமி இருந்தனர்.
உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் அப்பகுதி வழியே நபர் ஒருவர் காரை ஓட்டி வந்து ஆலயம் அருகே சென்றுகொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியுள்ளார். மேலும் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குற்றவாளியை துரத்திச் சென்று சுட்டுக் கொன்றனர்.
அவரிடமிருந்து வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் வெடிகுண்டு அங்கியை அணித்திருந்ததாக தெரிகிறது. வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி, "திரும்பிப் போங்கள், அவர் ஒரு வெடிகுண்டை வைத்திருக்கிறார், விலகிச் செல்லுங்கள்" என்று பொதுமக்களை நோக்கி சத்தமிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் குற்றவாளியை போலீசார் சுட்டுக்கொள்ளும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
ஐரோப்பிய அரசியல் சமூக மாநாட்டில் பங்கேற்பதற்காக டென்மாா்க் சென்றிருந்த பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதலாக இங்கிலாந்து காவல்துறை அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது.





















