OCTOBER மாத முதல் வாரத்தில் வெளியாக இருக்கும் படங்கள்
சினிமா
ஒவ்வொரு மாதமும் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், செப்டம்பர் மாதம் 'மதராஸி', 'பேட் கேர்ள்', 'காட்டி', 'காந்தி கண்ணாடி' உள்ளிட்ட படங்கள் வெளியாகின.
இந்த நிலையில், அக்டோபர் மாத முதல் வாரத்தில் வெளியாக உள்ள படங்கள் குறித்து பார்ப்போம்...
இட்லி கடை:
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நாளை வெளியாக உள்ளது. இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தை காண ரசிர்கள் ஆவலுடன் காத்து உள்ளனர்.
காந்தாரா சாப்டர் 1:
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' உருவாகி உள்ளது. நாளை மறுநாள் 2-ந்தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழக தியேட்டர் வியாபார உரிமம் சுமார் ரூ.33 கோடிக்கு படத்தின் விநியோகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மரியா:
நடிகர் பாவெல் நவகீதன் நடிப்பில் , அறிமுக இயக்குனர் ஹரி கே சுதன் இயக்கியுள்ள படம் 'மரியா'. சாய்ஸ்ரீ பிரபாகரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 3-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் சித்து குமரேசன், விக்னேஷ் ரவி மற்றும் சுதா புஷ்பா ஆகியோர் நடித்துள்ளனர்.






















