கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு சீனா இரங்கல்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சீனா இரங்கலைத் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 27 அன்று (சனிக்கிழமை) கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உடைய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) அன்று பெய்ஜிங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது, "உயிரிழந்தவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் அவர்களது குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியாவில் உள்ள சீனத் தூதரகமும் ஏற்கனவே தமது இரங்கலைத் தெரிவித்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் சீன நாட்டவர் யாரும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, இந்தியாவுக்கான சீனத் தூதர் ஸூ ஃபெய்போங் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.























