இலங்கை மீதான வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவின் மீளாய்வு இன்று ஜெனீவாவில்
இலங்கை
ஐக்கிய நாடுகள் சபையின் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான குழு (CED) அதன் 29 ஆவது அமர்வின் போது, இலங்கையின் முதல் காலமுறை அறிக்கையை வெள்ளிக்கிழமை (26) ஜெனீவாவில் மீளாய்வு செய்யவுள்ளது.
இம்மீளாய்விற்கான இலங்கையின் பிரதிநிதிகள் குழுவிற்கு, நாடாளுமன்ற உறுப்பினரும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹர்ஷன நாணயக்கார தலைமை வகிப்பதுடன், இக்குழுவில், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பொலிஸ் திணைக்களம், காணாமல் போனோர் அலுவலகம் (OMP), இழப்பீட்டு அலுவலகம் (OR), தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகம் (ONUR) மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகப் பணியகம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளடங்குவர்.
இம்மீளாய்வானது, இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழுவிற்கும், வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான குழுவிற்கும் இடையிலான கலப்பின ஊடாடும் உரையாடாலொன்றாக இடம்பெறவுள்ளது.
இலங்கையானது, 2015, டிசம்பர் 10 அன்று வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயத்தில் (ICPPED) கைச்சாத்திட்டதுடன், 2016, மே 25 அன்று அதனை அங்கீகரித்தது.
2023, ஆகஸ்ட் 23 அன்று, சமவாயத்தின் கீழ் அதன் கடமைகளை செயற்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டும் அதன் ஆரம்ப அறிக்கையை இலங்கை சமர்ப்பித்தது.
எதிர்வரும் மீளாய்வில் இலங்கையின் ஆரம்ப அறிக்கை வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான குழுவினால் (CED) பரிசீலிக்கப்படும்.
2025, செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறும், அதன் 29வது அமர்வின் போது, இலங்கை குறித்த மீளாய்வுடன், மொண்டினீக்ரோ மற்றும் பெனின் ஆகிய நாடுகளும் இக்குழுவால் மீளாய்வுக்குட்படுத்தப்படவுள்ளன.





















