கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்
இலங்கை
அரசாங்கத்தின் அபிவிருத்தியை கரைச்சி பிரதேச சபை குறிப்பாக தவிசாளர் தடுப்பதாக தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்தின் அபிவிருத்தியை மக்களுக்கு கிடைக்கவிடாது கரைச்சி பிரதேச சபை செயற்படுவதாக தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுயலாப அரசியல் நோக்கில் கிளிநொச்சியின் அபிவிருத்தியை தடுக்காதே ,அதிகாரத்தால் மக்களை ஆள நினைக்காதே ,இதுவரை காலமும் ஏமாற்றியது போதும் ,அப்பாவி மக்களுக்கு அநியாயம் செய்யாதே போன்ற சுலோகங்களையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி நகர சித்தி விநாயகர் ஆலய முன்றலில் இருந்து பேரணியாக பிரதேச சபை வரை சென்று பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட நேரம் தவிசாளர் அலுவலகத்தில் இல்லாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் பிரதேச சபையின் செயலாளரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
கரைச்சி பிரதேச சபை செயலாளர் தங்கபாண்டி ஞானராஜ் அவர்களிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கையளித்திருந்தனர்.
























