நாம ஆளும் கட்சியா இருக்கலாம், நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவானது
சினிமா
ஒருமுறை, முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த அதிமுக வினர் கூட்டமாக ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றனர். அவர்களிடம் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று விசாரித்தார்.
‘‘தலைவரே, எங்க ஏரியாவுக்கு புது போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. அவருக்கு நம்ப கட்சிக்காரங்களைக் கண்டாலே வெறுப்பு. அதிமுக வினர் என்று தெரிந்தாலே அடிக்கிறாரு. வேண்டு மென்றே எங்கள் மீது பொய் வழக்குகள் போடறாரு’’ என்று கோரஸாக குற்றப்பட்டியல் வாசித்தனர்.
‘‘ஏன்? நீங்க என்ன பண்ணிணீங்க?’’ என்று அவர்களை ஆழம் பார்த்தார் எம்.ஜி.ஆர்.!
‘‘நாங்க ஒண்ணுமே பண்ணலை தலைவரே’’... பம்மியது கூட்டம்.
‘‘அப்படியா? ’’ என்று கேட்டு சில விநாடிகள் நிறுத்திய எம்.ஜி.ஆர்., ‘‘ ஆமா, உங்க ஏரியா ஸ்டே ஷன்லே ஹெட் கான்ஸ்டபிளை அடிச்சது யாரு? ’’ என்று கூட்டத்தினரை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.
கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் பேச்சு மட்டுமல்ல; சில விநாடிகள் மூச்சும் வரவில்லை. பதில் சொல்ல முடியாத மவுனமே அவர்களின் தவறை வெளிக்காட்டியதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் முகத்தில் கோபக் கனல் வீசியது.
‘‘நான் ஒரு முதல் அமைச்சர். எனக்கு எல்லா தகவல்களும் செய்திகளும் உட னுக்குடன் வந்துவிடும். நீங்க தப்பு பண் ணிட்டு போலீஸ் மீது பழியைப் போடறீங்க. போலீஸ்காரங்களும் மனுஷங்கதானே? போலீஸைக் கடமையை செய்ய விடாம நீங்க போய் தொந்தரவு கொடுக்கிறீங்க. அப்புறம் போலீஸ்காரங்க நம்ம கட்சியினரை பழிவாங் கறாங்கன்னு எங்கிட்டயே வந்து சொல்றீங்க.
நாம ஆளும் கட்சியா இருக்கலாம். நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு அதிகாரி களை அவங்க எந்த துறையை சேர்ந்தவங்களா இருந்தாலும் மதிக்கணும். அவங்க பணிகளில் நாம குறுக்கிடக் கூடாது. தப்பு பண்ணிட்டு யாரா வது எங்கிட்ட சிபாரிசுக்கு வந்தீங்கண்ணா, நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். ஜாக் கிரதையா இருங்க’’ என்று வந்திருந்தவர்களை வார்த்தைகளால் புரட்டி எடுத்தார்.
அரண்டுபோன கட்சியினர், எம்.ஜி.ஆரைப் பார்த்து பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு நான்கு அடிகள் பின்வாங்கி பதிலேதும் பேசாமல் திரும்பி நடந்தனர்.
‘‘நில்லுங்க’’… எம்.ஜி.ஆரிடம் இருந்து அதட்ட லாய் உத்தரவு பிறந்தது. எதற்கு என்று புரியாமல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டதுபோல கூட்டத்தினர் நின்றனர்.
தந்தை பெரியாரின் கண்டிப்பும் பேரறிஞர் அண்ணாவின் கனிவும் கலந்து ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல் …
‘‘எல்லோரும் சாப்பிட்டுட்டு போங்க!’’
- தி இந்து























