40 ஏவுகணைகளால் தாக்கிய ரஷியா- உக்ரைன் எதிர் தாக்குதல்
உக்ரைன் மீது ரஷியா கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
உக்ரைனின் விமானப்படை தகவலின்படி, மொத்தம் 619 டிரோன்கள், 8 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 32 குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டன.
உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகள் இதில் 583 இலக்குகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தன. இதன் மூலம் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில், இந்த தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ரஷியாவின் சமாரா பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இரவில் 149 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில், சமாரா பிராந்தியத்தின் வான்வெளியில் 15 ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று மதியம், ரஷியாவின் சரடோவ் மற்றும் சமாரா மாகாணங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியிருந்தது.
இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.






















