லோகேஷ் கனகராஜ் கேட்டால் மறுக்க மாட்டேன்- அர்ஜுன் தாஸ்
சினிமா
மிரட்டல் வில்லனாக நடித்து வந்த அர்ஜுன் தாஸ், தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். 'போர்', 'ரசவாதி', 'அநீதி' வரிசையில் சமீபத்தில் வெளியான 'பாம்' படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் 'ஒன்ஸ்மோர்' படத்தில் அதிதி ஷங்கருடன் நடித்து வருகிறார்.
இதுகுறித்து அர்ஜுன் தாஸ் கூறும்போது, ''இப்போதைக்கு நெகட்டிவ் கதாபாத்திரங்களை நான் தேர்வு செய்யவில்லை. மற்றபடி அது வேண்டும், இது வேண்டாம் என்று சிந்திக்கவில்லை.
இப்போதைக்கு லோகேஷ் கனகராஜ் அழைத்தால், தயங்காமல் வில்லன் வேடத்தில் நடிப்பேன். எனக்கு கதை கூட அவர் சொல்லவேண்டிய அவசியம் கிடையாது. எனக்கான முகவரியைத் தந்தவர் அவர் என்பதால், அவர் சொல்லும் கதாபாத்திரங்களில் கண்ணை மூடி நடிப்பேன்.
ஹீரோவோ, வில்லனோ எதுவாக இருந்தாலும் இயக்குனர்கள் சொல்வதைக் கேட்டு நடிப்பவன் நான். இன்னும் சொல்லப்போனால் இயக்குனர்களின் நடிகராகவே இருக்க விரும்புகிறேன். நம்மை உயரத்தில் வைக்க போராடும் கூட்டத்தில் இயக்குனர்களே முக்கியமானவர்கள்'' என்றார்.





















