அமெரிக்காவில் கறுப்பின அடிமை முறை குறித்த புகைப்படங்கள், பொருட்களை நீக்க டிரம்ப் உத்தரவு
அமெரிக்க தேசிய பூங்காக்களில் உள்ள கறுப்பின அடிமை முறை, அடிமைகள் வணிகம், பழங்குடியினர் தொடர்பான பல புகைப்படங்கள் மற்றும் கண்காட்சிப் பொருட்களை நீக்குமாறு அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக 1863-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட "The Scourged Back" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் நீக்கப்பட உள்ளது. இது, பிரம்பால் அடிக்கப்பட்ட ஒரு அடிமையின் முதுகில் உள்ள காயங்களை காட்டும் புகைப்படம்.
அமெரிக்காவையும் அதன் தலைவர்களையும் இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்தையும் பிரதிபலிக்கும் கண்காட்சி பொருட்களை நீக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாக உத்தரவை செயல்படுத்த நாடு முழுவதும் உள்ள பூங்காங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"ஒரு சிறந்த நாடு அதன் வரலாற்றை மறைக்காது. நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் இரண்டிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று வரலாற்றாசிரியர்கள் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.






















