மின்சார சபை ஊழியர்கள் இழப்பீட்டுடன் வெளியேறலாம் – அரசாங்கம்
இலங்கை
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு பணிகள், அதன் ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி நேற்று (15) உறுதியளித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர், மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், CEB நான்கு நிறுவனங்களாகப் பிரிக்கப்படும் என்றும், ஆனால் நான்கு நிறுவனங்களும் 100 சதவீதம் திறைசேரிக்குச் சொந்தமானதாகவே இருக்கும் என்றும் கூறினார்.
புதிய மறுசீரமைப்பின் கீழ் தொழில்புரிய விரும்பாத ஊழியர்கள் இழப்பீட்டுத் தொகையுடன் வெளியேறலாம்.
அவ்வாறு தமது பதவியை இராஜினாமா செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 5 மில்லியன் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
சில தொழிற்சங்கங்கள் எழுப்பிய கவலைகளுக்கு பதிலளித்த அமைச்சர், சில குழுக்கள் மறுசீரமைப்பு செயல்முறையை தவறாகப் புரிந்துகொண்டு உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் கூறினார்.
மறுசீரமைப்பின் விளைவாக எந்த ஊழியரும் வேலையை இழக்க மாட்டார்கள் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.























